ச.ம.கவில் நாராயணன் இருந்த போது, சரத்துடன் ஜெ.வை சந்தித்த போது (பழைய படம்)
ச.ம.கவில் நாராயணன் இருந்த போது, சரத்துடன் ஜெ.வை சந்தித்த போது (பழைய படம்)
மத்துவமக்கள் கட்சி தலைவர் சரத்குமாருடன் ஏற்பட்ட மனக்கசப்பால்,  அக் கட்சியின் இன்னொரு எம்.எல்.ஏவான எர்ணாவூர் நாராயணன் பிரிந்து சமத்துவ மக்கள் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா கூட்டிய கூட்டணிக் கட்சி தலைவர்கள் கூட்டத்திலும் கலந்துகொண்டார்.
இந்த நிலையில் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்திருக்கிறார் சரத்குமார்.  ஒரே உறையில் இரு கத்திகளா(!) என்ற கேள்வியுடன், எர்ணாவூர் நாராயணனை தொடர்புகொண்டோம்.
நீங்கள் இருக்கும் அ.தி.மு.க. கூட்டணியில் உங்கள் முன்னாள் தலைவர் சரத்குமார் மீண்டும்  சேர்ந்திருக்கிறாரே..?
 வரட்டுமே.. சார்.. !
சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து சரத்குமார் உங்களை நீக்கியபோது,  கட்சியை கைப்பற்றுவேன் என்று ஆவேசப்பட்டீர்கள். சரத் வருகையை எப்படிப் பார்க்கிறீர்கள்? 
அதையெல்லாம் மனசுல வச்சுக்க முடியுமா.. கூட்டணிக்கு வர்றவரை வரவேற்கிறதுதானே, இன்னொரு கூட்டணி கட்சி தலைவருக்கு அழகு?
“ஜெயலலிதா மீதான கோபத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசாமல் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார் சரத்குமார். தவிர ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக என்னையும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யச்சொன்னார்” என்றெல்லாம் கூறினீர்கள். இப்படி ஜெயலலிதாவுக்கு எதிரானவர்  அதே கூட்டணிக்கு மீண்டும் வந்திருக்கிறார். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எர்ணாவூர் நாராயணன்
எர்ணாவூர் நாராயணன்

அதெல்லாம் பேசக்கூடாது சார். அவர் வரட்டும் சார். நல்லதுதான் சார்!
 என்ன சார்… இப்படி சொல்றீங்களே சார்..?
ஆமா சார்! அவரும் தோழமை கட்சியா ஆயிட்டாருல்ல சார்!  இனிமே அவரு பத்தி பேசக்கூடாதுல்ல சார்..!
அப்போ உங்களுக்கு சரத்குமார் கூட மனக்கசப்பு ஏதும் இல்லை.. அப்படித்தானே சார்?
ஆமா சார்! அவரு என்னை கட்சியிலேருந்து விலக்கிட்டாரு.  நான் விலகிட்டேன் தனி்க்கட்சி ஆரம்பிச்சு அம்மாவையும்  பார்த்து பேசிட்டேன். இனமே அவரைப்பத்தி பேசக்கூடாதுல்ல சார்!
வாழ்த்துகள் சார்! இதுதான் சார் உண்மையான அரசியல் நாகரீகம்..
நன்றிங்க சார்.  அவர பத்தி நாம தப்பா  பேசினா தோழமை கட்சிகளோட முரண்பாடு ஏற்படும். அப்புறம் மத்தவங்க தப்பா சொல்லுவங்க.. அது சி. எம். அம்மா வரைக்கும் போகும். அதெல்லாம் தப்பில்லையா சார்!
ஆனா.. இப்போ அவரும் உங்க கூட்டணிக்கு வந்துட்டாரு. உங்களுக்கு எம்.எல்.ஏ. சீட் தரக்கூடாதுன்னு அவரு தடுத்திட்டா.?
வாங்கட்டும் சார். எத்தனை சீட் வேணும்னாலும் அவரு வாங்கிக்கட்டும்.
இல்லீங்க.. உங்களுக்கு சீட் தரக்கூடாதுன்னு அவர் சொன்னா..?
சொல்லட்டும். எதுவேணாலும் சொல்லட்டும் சார்.  ஆனா நான் ஏதும் சொல்ல மாட்டேன் சார்.
சரி சார். ஜெயலலிதா கூட்டிய கூட்டணி தலைவர்கள் கூட்டத்துல நீங்க என்ன பேசினீங்க. எத்தனை சீட் கேட்டீங்க?
இல்ல சார். எதுவும் பேசலை சார். ஆதரவு கொடுக்குறோம். மத்தபடி எதுவும் எதிர்பார்க்கலை சார். வணக்கம் சார்.
–  ரவுண்ட்ஸ்பாய்