கொல்கத்தா:

அடுத்த பிரதமராகும் வாய்ப்பு வங்காளிக்கு கிடைத்தால், அது மம்தா பானர்ஜிக்குத்தான் கிடைக்க வேண்டும் என மேற்கு வங்க பாஜக தலைவர் திலீஸ் கோஸ் தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திலீஸ் கோஸ், மம்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும், அடுத்த பிரதமராகும் வாய்ப்பு வங்காளியாக இருந்தால் அது மம்தா பானர்ஜிக்குத்தான் கிடைக்கும். எனவே அவர் உடல் நலத்தை பேண வேண்டும் என்றார்.


பாஜகவைச் சேர்ந்த வங்காளி பிரதமராக வாய்ப்பில்லையா என்ற கேள்விக்கு, அது பிறகு நடக்கலாம். இன்றைய நிலையில் மம்தா பானர்ஜிக்குத் தான் வாய்ப்பு. ஜோதிபாசு பிரதமராகியிருக்க வேண்டும். ஆனால் அவரது கட்சியினரே இதை அனுமதிக்கவில்லை. ஏற்கெனவே பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாகிவிட்டார். இப்போது வங்காளி பிரதமராவது அவசியம் என்றார்.
வர இருக்கும் தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து களம் காண வேண்டிய நிலையில், பாஜக தலைவர்கள் மத்தியில் கோஸின் இந்த பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக ராஜ்யசபை எம்பி ரூபா கங்குலி கூறும்போது, நானும் கோஸ் கூறியதைப் பார்த்தேன். அவரது விருப்பத்தை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

பிரதமராக வேண்டும் என்று விரும்பும் மம்தா பானர்ஜிக்கு, இப்படித்தான் வாழ்த்த முடியும். எனினும் மேற்கு வங்க பாஜகவைப் பொருத்தவரை, அவர் பிரதமராக முடியாது. அதுமட்டுமல்ல அடுத்த முறை அவர் முதல்வராகக் கூட முடியாது என்றார்.