புதுடெல்லி:

நாங்கள் யாருக்கும் ஊதுகுழல் போல் செயல்படவில்லை. எங்களை புறக்கணிக்காதீர்கள் என, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஜீ நியூஸ் தொலைக் காட்சி கடிதம் எழுதியுள்ளது.


காங்கிரஸின் தேர்தல் அணுகுமுறையில் மாற்றமும் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு குறைந்து வரும் நேரத்தில் ராகுல் காந்திக்கு ஜீ நியூஸ் கடிதம் எழுதியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக கருதப்படுகிறது..
இதில் தொலைக்காட்சியின் முக்கிய நிர்வாகியான பாஜக ராஜ்யசபா எம்பி. சுதீர் சவுத்ரி உட்பட 6 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
அதன் விவரம் வருமாறு;
நாங்கள் யாருக்கும் ஊதுகுழலாக செயல்படவில்லை. அவ்வாறு அழைப்பதையும் விரும்பவில்லை. எங்களைப் பற்றி உங்கள் செய்தி தொடர்பாளர்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறுவதால், எங்கள் எதிர்ப்பை அமைதியாக பதிவு செய்யும் நோக்கில் இந்த கடிதத்தை எழுதுகிறோம்.
நாங்கள் யாருக்கும் ஆதரவாக பேசவில்லை. ஆனால் நாட்டுக்காக பேசுகிறோம்.
ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி சார்பில் எங்கள் தொலைக்காட்சி விவாதத்துக்கு வந்த செய்தி தொடர்பாளர்கள் நல்ல முறையிலேயே நடத்தப்பட்டனர். நாங்கள் தனிப்பட்ட நபருக்காக பேசவில்லை. நாட்டுக்காக பேசுகின்றோம்.
தேசியம் என்பது கடமை என்று நம்புகின்றோம். அது அரசியல் அல்ல. உங்கள் செய்தி தொடர்பாளர்களை எங்கள் தொலைக் காட்சி விவாதத்துக்கு அனுப்பினால், காங்கிரஸ் கட்சியின் நலன் பாதுகாக்கப்படும்.
மாறுபட்ட கருத்துகளை நாங்கள் வரவேற்கின்றோம். அதனை உங்கள் செய்தி தொடர்பாளர்கள் செய்வார்கள் என்று நம்புகின்றோம்.
இவ்வாறு ராகுல் காந்திக்கு அனுப்பிய கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளனர்.