வுகாத்தி

குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்த்து அசாம் மாநிலத்தில் கடும் போராட்டம் நடந்து வருகிறது.

மத்திய அரசு இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர உள்ளது. அதன்படி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மற்றும் வங்க தேசத்தில் இருந்து இங்கு வந்து 6 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் இந்துக்கள், சீக்கியர்கள், புத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறித்துவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என சட்டம் மாற்றப்பட உள்ளது. பிரதமர் மோடி தற்போதைய தொடரில் இந்த மசோதா பாராளுமன்ற ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று அறிவித்தார்.

இதை ஒட்டி அசாம் மாநிலத்தில் கடும் போராட்டம் தொடங்கி உள்ளது. அசாம் மாநிலத்தில் கிரிஷக் முக்தி சங்க்ராம் சமிதி என்னும் அமைப்பின் கீழ் 70 அமைப்புக்கள் இந்த மசோதாவுக்கு எதிராக அணி திரண்டுள்ளன. அசாமை ஆளும் அசாம் கன பரிஷத் கட்சி பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என வற்புறுத்தி அவர்கள் பேரணி நடத்த முயன்றனர். ஆனால் காவல்துறையினர் பேரணியை தடுத்து நிறுத்தி விட்டனர்.

இந்த அமைப்புகளின் தலைவர் அகில் கோகாய், “பிரதம்ரின் அறிவிப்புக்கு எங்கள் எதிர்ப்பை காட்ட பேரணி நடத்த முயன்றோம். இந்த மசோதாவினால் மாநிலத்தில் உள்ள மக்களின் தனித்துவம் பாதிப்பு அடையும். டில்லியில் உள்ள ஒரு தலைவர் எங்களை இங்கிருக்கக் கூடாது என மிரட்டுவதையும் அதை இங்குள்ள அரசும் பாஜக தலைவர்களும் வரவேற்பதை எங்களால் சகித்துக் கொள்ள முடியாது.” என தெரிவித்துள்ளார்.

அசாம் முதல்வர் சோனோவால், “நான் இந்த மாநிலத்தின் முதல்வர். எனக்கு பிரம்மபுத்திராவில் இருந்து பாரக் சமவவெளி வரை உள்ள மக்களை காக்கும் பணி அளிக்கப்பட்டுள்ளது. எங்கள் அரசை குறித்து யாரும் சந்தேகப்பட வேண்டாம். நான் அனைத்து மக்களின் தனித்துவத்தையும் பாதுகாப்பேன். நான் நமது மக்களின் இனம், நிலம், தாய்நாடு, கலாச்சாரம் ஆகியவற்றை என்றும் பாதுகாப்பேன்” என அறிக்கை விடுத்துள்ளார்.