டெல்லி:
ரூ. 5000 மற்றும் அதற்கு மேல் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்யும் போது விசாரணை நடத்தப்படும் என்று கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி இன்று திரும்பப் பெற்றுள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த மாதம் 8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. மக்களிடம் உள்ள பழைய செல்லாத ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றுவதற்கு டிசம்பர் 30ம் தேதி வரை கெடுவிதித்திருந்தது. இந்நிலையில், கடந்த 19ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி ஓர் புதிய அறிக்கையை வெளியிட்டது.
 
 

அதில், 5000 ரூபாய் அல்லது அதற்கும் மேலான தொகையை டிசம்பர் 30ம் தேதி வரை ஒரே ஒருமுறை மட்டுமே செலுத்த முடியும் என்றும், அப்படி செலுத்தும் போது, குறைந்தபட்சம் 2 வங்கி அதிகாரிகளின் முன்னிலையில், தொகை தாமதமாக செலுத்தப்படுவதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.
மேலும், இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுகையில், பழைய ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்யும் பொதுமக்களிடம் எந்தவிதமான விசாரணைகளும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று கூறியிருந்தார்.
இதனால் மக்களிடையேயும், வங்கி அதிகாரிகளிடையேயும் ஒரு குழப்பமான சூழல் உருவானது. இந்நிலையில் டிசம்பர் 19ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பை திரும்பப் பெறுவதாக திடீரென ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது. இதனால், 5000 ரூபாய் செலுத்தும் போது வங்கி அதிகாரிகள் பொதுமக்கள் கேள்வி கேட்டு விசாரணை நடத்தமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.