பெரம்பூர்: வடசென்னையில் முக்கிய பகுதியான வியாசர்பாடி, கொடுங்கையூர், புளியந்தோப்பு பகுதிகளில் போதைபொருள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், போதை பொருள் விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வடசென்னையின் முக்கிய பகுதிகளான புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ், ஓட்டேரி, வியாசர்பாடி, கொடுங்கையூர்  ஆகிய பகுதிகளில் சமீப காலமாக போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது.  வலி நிவாரணி மாத்திரை என்ற பெயரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த போதை  மாத்திரைகளை தண்ணீரில் கலந்து பயன்படுத்தினால் போதை தலைக்கேறும். இதனால், அந்த பகுதிகளில் அவ்வப்போது அசம்பாவித சம்பவங்களும் ஏற்படுகின்றன.

இந்த போதை பாத்திரைகளை உழைக்கும் வர்க்கத்தினர் மட்டுமின்றி, கல்லூரி, பள்ளி மாணாக்கர்களும் பயன்படுத்தும் நிலை உருவாகி உள்ளது. மேலும் பல கடைகளில் மீண்டும் போதை பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையும் கொடிகட்டி பறக்கின்றன.  இதை விற்பனை செய்யும் நபர்கள் அரசியல் பின்புலத்துடன் இருப்பதால், காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் காட்டி வருகின்றன.

ஏற்கனவே   புளியந்தோப்பு பகுதியில் இளைஞர்கள் சிலர் போதை மாத்திரைகளை பயன்படுத்துவதாக  வந்த புகாரின் பேரில், ஓட்டேரி பகுதியில் சிலரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம்  இருந்து ஏராளமான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தற்போது, வியாசர்பாடி பகுதியில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.எம்கேபி.நகர் காவல்துறைக்கு கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து, எம்கேபி நகர் 19வது மத்திய குறுக்குத் தெருவை சேர்ந்த 2 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து,  போதை மாத்திரைகளை விற்பனை செய்த அந்த பகுதியைச் சேர்ந்த தர்ஷன் என்ற இளைஞனையும், கொடுங்கையூர் எழில்நகர் பகுதியைச்சேர்ந்த அப்துல் மஜீத்  என்ற இளைஞனையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களுக்கு போதை மாத்திரைகள் எங்கிருந்து கிடைக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.