9
திமுகவுடனான தொகுதி பங்கீடு பற்றிய செய்திகளை மறுத்து அறிக்கை வெளியிட்டகையோடு, டில்லியில் பாஜகவோடு பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடுகளை செய்திருக்கிறது தே.மு.தி.க.   இதையடுத்து தமிழ அரசியல் வட்டாரத்தில்  மீண்டும் பரபரப்பு ஏற்படுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, சென்னையில் சந்தித்து கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.  கூட்டணி பற்றி பேசியதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். ஆனால் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தே.மு.தி.க. தரப்பில் அறிக்கை வெளியானது.
இதற்கிடையே  திமுகவோடு, தேமுதிக கூட்டணியை உறுதி செய்துவிட்டதாகவும், தேமுதிகவுக்கு 59 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய திமுக ஒப்புக்கொண்டதாகவும், செய்திகள் பரப்பப்பட்டன. சன் டிவி அதிபர் கலாநிதி மாறன்தான் முன்னின்று இதற்கான பேச்சு வார்த்தைகளை நடத்தி முடித்ததாகவும்  அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் கலாநிதி மாறன் அப்போது நாட்டிலேயே இல்லை. வெளிநாட்டில் இருந்தார் என்ற தகவல் பிறகு வெளியானது. இதைக் குறிப்பிட்டு பத்திர்கை டாட் காம் இதழில் செய்தி வெளியானது.
“தி.மு.க. தரப்புதான் கூட்டணி முடிந்துவிட்டதாக தவறான செய்திகளை பரப்புகிறது” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் விஜயகாந்த் வருத்தப்பட்டிருந்ததையும் நமது பத்திரிகை டாட் காம் இதழில் வெளியிட்டோம். இதன் பிறகு,  தேமுதிக எம்.எல்.ஏ சந்திரகுமார், “கூட்டணி முடிவாகிவிட்டதாக வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி குறித்து  பேச்சு நடத்த தேமுதிக குழு டில்லி சென்றுள்ளது.    டில்லியில்  பியூஸ் கோயல், பிரகாஷ் ஜாவேடேகர், போன்ற பாஜகவினரை இந்த குழு இன்று சந்திக்க இருக்கிறது. இந்த சந்திப்பின்போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முரளிதர் ராவ் போன்ற பாஜக முக்கிய பிரமுகர்களும் உடன் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு குறித்த தகவலை அறிந்த தி.மு.க. வட்டாரம் மிகுந்த அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.