புதுடெல்லி:

அக்டோபர் 24-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை தற்காலிக சிபிஐ இயக்குனர் நாகேஸ்வர ராவ் பிறப்பித்த பணியிட மாற்ற உத்தரவுகளை மீண்டும் பொறுப்பேற்ற அலோக் வர்மா ரத்து செய்துள்ளார்.


சிபிஐ இயக்குனர் அலோக் குமார் வர்மாவும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும், சில மாதங்களுக்கு முன்பு பரஸ்பரம் லஞ்ச குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்டனர்.

இதனையடுத்து, இருவரும் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். சிபிஐயின் தற்காலிக இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.

கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதையடுத்து, அலோக் குமார் வர்மா உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இது தொடர்பான மத்திய அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

எனினும் அவர் கொள்கை முடிவு ஏதும் எடுக்கக் கூடாது, அன்றாட அலுவல்களை மட்டுமே கவனிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், மீண்டும் சிபிஐ இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்ட அலோக் குமார் வர்மா, அக்டோபர் 24-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை, தற்காலிக சிபிஐ இயக்குனர் நாகேஸ்வர ராவ் பிறப்பித்த பணிமாற்ற உத்தரவுகளை ரத்து செய்தார்.