சென்னை: ஒரு அரசாணையைக் கூட படித்துத் தெரிந்துக்கொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்? இல்லை இவர்கள் தமிழக அரசை விட மேம்பட்டவர்களா? என தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நின்று மரியாதை செய்யாத  ரிசர்வ் வங்கி அதிகாரிகள் நடத்தை குறித்து  திமுக எம்.பி. கனிமொழி கொந்தளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக பாடலாக அறிவிக்கப்பட்டு, அது பாடப்படும்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அத்துடன்,  அனைத்து  கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்து அமைப்புகளிலும்  தமிழ்த்தாய்  வாழ்த்து கட்டாடம் பாடப்பட வேண்டும் என்றும்,  அவ்வாறு தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்றும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது.

ஆனால், தமிழக அரசின் அரசாணையை மத்திய அரசு அதிகாரிகள் பின்பற்றாமல் புறக்கணித்து வருகின்றனர். இன்று ரிசர்வ் வங்கி வளாகத்தில் தேசிய கொடி ஏற்றப்படும் நிகழ்ச்சியின்போது, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது பல அதிகாரிகள், எழுந்து நிற்காமல் அமர்ந்து இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, செய்தியாளர்கள், ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம், தமிழ்த்தாய்  வாழ்த்து பாடும்போது ஏன் எழுந்து நிற்கவில்லை  என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கள், அதற்கு நாங்கள் ஏன் எழுந்து நிற்க வேண்டும் எனவும்,  தமிழ்த்தாய்  வாழ்த்து பாடும்போது  நிற்க வேண்டியது கட்டாயமில்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக தமிழ் தெரிந்த அலுவலர்களே வாதம் செய்ததுள்ளனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், திமுக எம்.பி. தமிழகஅரசின் அரசாணையை சுட்டிக்காட்டி, ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் அதிகாரப்போக்குக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து உள்ளார்.

ஒரு அரசாணையைக் கூட படித்துத் தெரிந்துக்கொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்? இல்லை இவர்கள் தமிழக அரசை விட மேம்பட்டவர்களா?  என கொந்தளித்துள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகள்! சர்ச்சை – வீடியோ