சென்னை:
சென்னையில் 14 தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் இரவு, பகல் பாராமல் ஓய்வின்றி பணியாறி வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

இதுமட்டுமின்றி, கொரோனா வைரஸ் பரவால் தடுக்க பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வலியுறுத்தப்பட்டு வருவதுடன், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களின் பணியை பாராட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாத பூஜைகளும் நடத்தப்பட்டு, பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் தூய்மைப்பணியில் ஈடுபட்டிருந்த 14 தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்,  மதுரை மாவட்டத்தில் சிறப்பு எஸ் ஐ உள்ளிட்ட 4 காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மதுரையில் ஏற்கனவே கொரோனா தொற்றால் 56 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் நான்கு பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டதால் மதுரை மாவட்டத்தில் மட்டும் கொரானாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

இதில், மதுரை அரசு ராஜாஜி கொரானா சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றிய ஒரு பெண் செவிலியர் , மருத்துவமனையின் ஒப்பந்த பணியாளர்கள் 3 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது குறிப்பிடத்தக்கது. இதில் மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த 54 வயது நபர் கடந்த மார்ச் 25ஆம் தேதி உயிரிழந்தார். மேலும் மதுரை மேலமாசி வீதி பகுதியைச் சேர்ந்த 72 வயது மூதாட்டி நேற்று உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை அரசு ராஜாஜி கொரானா சிறப்பு மருத்துவமனையில் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 28 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்ற நிலையில் 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.