vijay tv
விஜய் டிவியின் ஜூப்பர் ஜிங்கரில் ஆனந்த் அரவிந்தாக்ஷன் என்ற நபர் வெற்றி பெற்றார் என்பதை தெரியாதவர்கள் இன்று தமிழ்நாட்டில் இருக்கவே முடியாது. அதில் ஒரு எபிசோட் கூட பார்த்ததில்லை என்பதால் அந்த நபரின் முகம் கூட எனக்கு தெரியாது. ஆனால் சற்றே வித்தியாசமான அந்த பெயரை எங்கேயோ கேட்ட மாதிரியே இருந்ததாக மனதை குடைந்து கொண்டே இருந்தது.
பாட்டு கேட்பது ரொம்ப பிடித்தமான பொழுதுபோக்கு என்பதால் என் மொபைலில் கிட்டத்தட்ட 2500 பாடல்கள் வைத்திருக்கிறேன். பெரும்பாலானவையில் பாடல்களை பற்றிய விவரங்களை (படத்தின் பெயர், பாடகர்கள், இசையமைப்பாளர்..) தெளிவாக tag செய்திருப்பேன்.
அந்த தொகுப்பில் இந்த பெயரை போட்டு தேடியதில் வந்து விழுந்தன அதிகம் பிரபலமடையாத ஆனால் எனக்கு மிகவும் பிடித்த இரு பாடல்கள்.
1. இந்த வான்வெளி விடியாதோ – படம்: ஆரோகணம்(2012)
2. யார் வீட்டு மகனோ –
படம்: நீர்ப்பறவை(2012)

இரண்டு பாடல்களும் Male Solo, பாடியவர் ஆனந்த் அரவிந்தாக்ஷன்!
இன்னும் கொஞ்சம் தேடிப்பார்த்ததில் 10 எண்றதுக்குள்ள, இவன் வேற மாதிரி, பாண்டிய நாடு, மத யானை கூட்டம், உள்ளிட்ட பல படங்களில் பாடியிருக்கிறார் இவர். இந்த தகவலை எதாவதொரு எபிசோடில் சொன்னார்களா என்பது தெரியவில்லை. ஓரளவு தொடர்ச்சியாக பார்த்தவர்களிடம் கேட்ட போது அவர்களுக்கும் இது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. பார்வையாளர்களை எவ்வளவு கேனையர்களாக நினைத்திருந்தால் ஒரு பிண்ணனி பாடகரை போட்டியாளராக கொண்டு வந்து, அவரை பாதியில் எலிமினேட் செய்து, மீண்டும் wild card என்ற பெயரில் உள்ளே கூட்டி வந்து, மக்களை முட்டாளாக்கி எஸ்.எம்.எஸ் ஓட்டு போட வைத்து அவரை வெற்றியாளராக தேர்ந்தெடுப்பார்கள். இது ஒரு பெரிய ஏமாற்று வேலை என்று பல முறை பலர் சொன்ன போது ஏற்றுக்கொள்ளாதவர்கள் இது போன்ற போலி நிகழ்ச்சிகளை ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் உருப்படியாக எதாவது செய்யலாம்.
@Vijayachakravarthy SP