1
பொதுநல சேவகரான,  பெரியார் தி.க. பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவரும், கிராணைட் முறைகேடு உட்பட பல புகார்களுக்கு ஆளான சி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த தளி எம்.எல்.ஏ.  ராமச்சந்திரனுக்கு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட சி.பி.ஐ. கட்சி வாய்ப்பு அளித்துள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பெரியார் தி.க. கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளர் பழனி துப்பாக்கியால் சுடப்பட்டும்,தலை துண்டித்தும் படுகொலை செய்யப்பட்டார். இந்த  கொலை தொடர்பாக தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு  செய்து தேடிவந்தனர்.
இந்நிலையில் ராமச்சந்திரன் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் சரண் அடைந்ததைத்  தொடர்ந்து,அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே ராமச்சந்திரன்  மீது அடுத்தடுத்து பல்வேறு வழக்குகள் பதிவு  செய்யப்பட்டன.
பேரிகை அருகே விவசாயி ஆலம்பாஷா என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது  தொடர்பாக ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து உத்தனப்பள்ளி போலீசார்  கனிம வளங்களை வெட்டி எடுத்ததில் முறைகேடு செய்ததாக தொடர்ந்த இரு  வழக்குகளிலும் அவர் கைது செய்யப்பட்டார்.
அதன் பிறகு,  தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இருதுகோட்டை, சந்தனப்பள்ளி  பகுதிகளில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட  வழக்கிலும், ஓசூர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து பெரியார் தி.க.பிரமுகரை தாக்கிய  வழக்கிலும் ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டார்.
இப்படி தொடர்ந்து அவர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டதால் அவர் மீது  குண்டர் சட்டம் பாய்ந்தது.
இவருக்கு, அதே தளிதொகுதியில் போட்டியிட சி.பி.ஐ. கட்சி வாய்ப்பு அளித்துள்ளது. இது பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
“கிரானைட் கொள்ளைக்கு எதிராக பேசும் மக்கள் நலக்கூட்டணி சார்பில், கிரானைட் கொள்ளையில் ஈடுபடும் ராமச்சந்திரனை வேட்பாளராக அறிவி்த்தது தவறு” என்று  சமூக நீதிக்கான மக்கள் மையத்தின் சார்பில் தோழர் தியாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது குறித்து விரிவாக பேச, நாளை மதியம் 2 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். இந்த சந்திப்பு மதியம் இரண்டு மணிக்கு நடக்கிறது.