சென்னை

கோவில் நிலத்தை அளிக்கும் முன்னரே கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலக அடிக்கல் நாட்டுவிழா நடத்தியதற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2020 ஆம் வருடம் அக்டோபர் மாதம் அப்போதைய முதல்வ்ர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் கட்ட வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் நிலத்தில் அடிக்கல் நாட்டினார்.  இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.   அந்த மனுவை உயர்நீதிமன்ற அமர்வு விசாரித்து வந்து நேற்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி வீரசோழபுரத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 34.817 ஏக்கர் நிலத்தில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் வளாகம் கட்டுவதற்கு 2020 அக்டோபரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டியது சட்டவிரோதமானது எனச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும்  தற்போது அந்த நிலத்தை 1.6 லட்ச ரூபாய் மாத வாடகைக்குக் குத்தகைக்கு எடுக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை 15% உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், தெரிவித்த முதல் அமர்வு தலைமை நீதிபதி டி. ராஜா மற்றும் நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி ஆகியோர் கட்டுமானப் பணியை முன்னெடுத்துச் செல்ல அரசாங்கத்தை அனுமதித்துள்ளனர்.