சென்னை

ஜூலை 3ஆம் வாரம் சென்னையில் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு  விண்ணப்பிக்கச் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

இன்று சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டச் செயலாக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.  இது குறித்து சென்னை மாநகராட்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில்

”கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்குத் தகுதியான பயனாளிகளின் விவரங்களைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நியாயவிலைக்கடைகள் கண்டறியப்பட்டுள்ளன.

குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பள்ளிக் கூடங்கள். சமுதாய நலக்கூடங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் இரவு காப்பகங்கள் எனத் தேவையான முகாம்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஜூலை 3ஆம் வாரம் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்கள் நடைபெறும் இடங்களில் குடிநீர் வசதி, மின்விசிறி, மின்வசதி, இருக்கைகள், கழிப்பறை, தீயணைப்புக் கருவிகள், சாய்வு நடைபாதை வசதிகள், முதலுதவிப் பெட்டி வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. மேலும், தேவையான இடங்களில் பந்தல்களும், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் போன்றோருக்குத் தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.