simbu

 

சிம்புவின் ஆபாச பாடல் விவகாரம் எழுந்தபோதே, எல்லோரது பார்வையும் குஷ்பு பக்கம்தான் திரும்பியது.

காரணம், பொதுவாக, திரைப்பட நடிகை என்றால் வெளியுலகம் தெரியாது என்கிற கருத்தை முறியடிக்கும் நடிகைகளில் குஷ்பு முதன்மையானவர்.

உள்ளூர் விஷயம் முதல் உலக விவகாரம் வரை அலசுவார். சமூகத்தில் தவறான விசயம் நடப்பதாக மனதிற்குப் பட்டால் உடனே அதற்கு எதிர்வினை ஆற்றுவார். எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் தனது கருத்திலிருந்து பின்வாங்க மாட்டார்.

இதற்கு உதராணமாக சொல்லவேண்டுமானால், கற்பு குறித்த அவர் பேசியதை சொல்லாம். 2005ம் ஆண்டில் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கற்பு குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. குஷ்பு வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தின.

எல்லாவற்றுக்கும் மேலாக, அவர் மீது பல்வேறு ஊர்களில் வழக்கு தொடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் வரை சென்று அந்த வழக்குகளில் இருந்து வெளியே வந்தார் குஷ்பு.

அப்போது குஷ்பு, “என் மீதான வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது சந்தோஷத்தை தருகிறது. கடந்த 5 வருடங்களாக நான் பட்ட வேதனைகளும் கஷ்டங்களும் அதிகம். ஆனால் ஒருவர் நேர்மையாக இருந்து நீதிக்காக போராடினால் அரசியல் பலம், பண பலம் எதிர்த்து நின்றாலும் சாதாரண மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பது என் வழக்கு மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது”  என்று நெஞ்சு நிமிர்த்திச் சொன்னார்.

அதே போல, தாலி அணிவதா வேண்டாமா என்பதை அந்தந்த பெண்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று பெரியார் விழாவில் பேசினார். இந்துத்துவ அமைப்புகள் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. ஆனால் தனது கருத்தில் மாற்றமில்லை என்றார் குஷ்பு.

அரசியலிலும் தனது அசாத்திய துணிச்சலை வெளிப்படுத்தியவர்தான் குஷ்பு.

திமுகவில் இணைந்து சுறுசுறுப்பாக பணியாற்றிக்கொண்டிருந்த குஷ்பு  ” திமுகவுக்கு அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்று நாமே ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. திமுக தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் யார் என்பதை பொதுக்குழுதான் முடிவு செய்யும். தலைவர் மட்டுமே முடிவு எடுத்துவிட்டதால் அடுத்த தலைவர் தளபதியாகத்தான் ( மு.க. ஸ்டாலின்) இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம்” என்று கூறினார்.

இந்தக் கருத்தால் ஸ்டாலின் ஆதரவாளர்கள் கடுமையாகக் கோபம் கொள்வார்கள் என்று தெரிந்தும் வெளிப்படையாக பேசினார். அதற்கு ஏற்றமாதிரி அவர்மீது, கல்வீச்சு செருப்பு வீச்சும் நடந்தது.

இன்னொரு முறை, “முத்தமிடும் போட்டி நடத்துவது தவறில்லை” என்று குஷ்பு சொல்ல.. அதுவும் சர்ச்சையாக வெடித்தது.

ஆனாலும் தனது மனதிற்கு சரி என்று பட்டதை வெளிப்படையாகப் பேசுவதுதான் குஷ்புவின் வழக்கம்.

ஆனால் தற்போது சிம்பு விவகராத்தில் மவுனமாக இருக்கிறார். “என்னிடம் பீப் சாங் பாடலைப்பற்றி கேட்பதை நிறுத்துங்கள்.  அந்த பாடலைக் கேட்பதற்கான ஆர்வமோ, நேரமோ எனக்கு இல்லை.. அதற்காக என் நேரத்தை வீணடிக்க முடியாது.. வெள்ள நிவாரணப்பணிகளில் நான் பிஸியாக இருக்கிறேன்..” என்று அவர் சொன்னதாக செய்தி வந்தது.

ஆனாலும் எண்ணத்தில்  குஷ்புவை தொடர்புகொண்டோம்.

பொதுவான சில விசயங்கள் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார். ஆனால் “சிம்பீப்” பாடல் பற்றி  ஏதும் சொல்லவில்லை.

ஆகவே அவரை மீண்டும் தொடர்புகொண்டோம். அவர், “எனக்கு தேவையில்லாத விசயம் இது” என்றார் குஷ்பு.

எந்த ஒரு விசயமானாலும்.. குறிப்பாக பெண்ணியம், கற்பு, தாலி குறித்துகூட..  தைரியமாக வெளிப்படையாக கருத்து சொல்லும் குஷ்பு, தமிழகமே எதிர்க்கும் “சிம்பீப்” பாடல் பற்றி, “தேவையில்லாத விஷயம்” என்கிறார்? அதுவும், குஷ்புவின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருப்பவர்களுள் சிம்புவும் ஒருவர்.

ஒருவேளை நட்பை  கற்பு போல எண்ணுகிறாரோ..?

  • சுந்தரம்