Vedhalam-Movie-Music-Album-Released-leaked

 

சென்னையில் வசிக்கும் அஜீத், தனது தங்கை லட்சுமி மேனனை காலேஜில் சேர்க்க கொல்கத்தா போகிறார். அங்கு கால் டாக்சி ஓட்டுநரான மயில்சாமியின் அறிமுகம் கிடைக்க, அவர் உதவியுடன் கொல்கத்தாவில் தங்கையுடன் தங்குகிறார் அஜீத். அஜீத்துக்கு கால் டாக்சி ஓட்டுனர் வேலை கிடைக்கிறது.

அஜீத் காரில் ஒரு முறை ஸ்ருதி ஹாஸன் பயணிக்கிறார். அஜீத்தின் அப்பாவியான குணத்தை கவனித்த அவர், ஒரு வழக்கில் பொய் சாட்சியாக அஜீத்தை கொண்டுவந்து நிறுத்துகிறார். அஜித் எகனைக்கு முகனையாய் பேச.. பொய் சாட்சி என்பது அம்பலமாகிவிடுகிறது. ஸ்ருதி வக்கீல் தொழிலைப் பார்க்க முடியாத நிலைமை ஏற்பட்டுவிடுகிறது.

இந்த நிலையில் லட்சுமி மேனனை காதலிக்கிறார் அஸ்வின். அஜீத்தும் சம்மதிக்க.. திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன.

அப்போதுதான் ட்விஸ்ட்.

ஒரு நாள் இரு கடத்தல்காரர்களை அஜீத் கொலை செய்ய… அதை ஸ்ருதி ஹாஸன் பார்த்துவிட,.. ஓப்பன் பண்ணால் ப்ளாஷ்பேக்…

அஜீத் தான் யார் என்பதைச் சொல்கிறார்… லட்சுமி அவர் தங்கையே இல்லை என்பதையும் கூறுகிறார்.

அப்புறம் என்ன… அஜீத் யார், அவர் ஏன் கொலை செய்கிறார்? லட்சுமி மேனனுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு.. என்பதை எல்லாம் காரம், மணம், குணத்துடன் சொல்லியிருக்கிறார் டைரக்டர் சிவா.

அப்பாவி கோயிந்து, அதிரடி ஹீரோ என வேறு வேறு குணங்களை வெளிப்படுத்தும் கேரக்டர் அஜீத்துக்கு. நடிப்பு, ஃபைட் என்று எதிலும் குறை வைக்கவில்லை அஜித். அவ்வப்போது வரும் பஞ்ச் டயலாக்தான் தாங்கலை. ( நீ கெட்டவன்னா, நான் கேடு கெட்டவன்!)

அதிரடி ஆக்சன் படங்களில் ஹீரோயின் எப்போதுமே ட்வல்த் மேன்.. ஸாரி உமன் தான். இதில் ஸ்ருதிக்கும் அதுதான் கதி. மற்றபடி சொல்லிக்கொள்ளும்படியான பாத்திரம் இல்லை.

அஜித்தின் தங்கையாக வரும் லட்சுமி மேனனுக்கு நடிப்பதற்கு ஸ்கோப் உள்ள படம். அவரும் நன்றாக பயன்படுத்திக்கொண்டிருக்கறார். அண்ணன் மீது வைத்துள்ள பாசத்தை அவர் வெளிப்படுத்தும் காட்சிகள் அருமை.

ராகுல்தேவ், கபீர் சிங், அங்கித் சவுகான் என்று வில்லன் படையே இருக்கிறது. ஆனால் அவர்களது பேச்சு, செயல் எல்லாம் காமெடியன்கள் போல இருக்கிறது. ஆனால காமெடியன் சூரியோ சிரிக்கவைக்கவில்லை. நகை முரண்.

லாஜிக் பார்க்க வேண்டாத படம். அஜீத் கொலை செய்ய.. அதை எங்கேயோ இருக்கும் ஸ்ருதிகாசன் எப்படி கரெக்ட்டாக பார்க்கிறார் என்பது தெரியவில்லை. இது ஒரு உதாரணம்தான். சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம்.

அதே போல படம் வெளியாகும் முன்பே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய ப்ளாஷ்பேக் காட்சிகளை சப்பென்று முடித்துவிட்டார் இயக்குநர்.

ஒளிப்பதிவு வெற்றி. சென்னை, கொல்கத்தா காட்சிகளில் வித்தியாசப்படுத்தி காட்டி சபாஷ் வாங்குகிறார். அவரது கேமரா இத்தாலியை படம் பிடித்த விதமும் ரசிக்க வைக்கிறது.   ஹாலிவுட் படங்களுக்கு இணையான ஒளிப்பதிவு

அனிருத்தின் துள்ளல் இசையில் ஆலுமா டோலுமா, வீர விநாயகா பாடல்கள்  ரசிகர்களை ஆட வைக்கின்றன.

பாலியல் தொழிலுக்காகப் பெண்களை கடத்தி விற்கும் சர்வதேச நெட்வொர்க்  பற்றி எடுத்திருப்பது பாராட்ட வேண்டிய விசயம்தான். ஆனால் ஆது மட்டுமே போதுமா?   முக்கியமாக, பாட்சா சாயல் அடிப்பதை தவிர்த்திருக்க வேண்டும்.

மிகப்பெரிய பொருட்செலவு, மிகப்பெரிய ஹீரோ, மிகப்பெரிய ஹீரோயின், மிகப்பெரிய டெக்னீசியன்… மிகச் சிறிதாவது கதையை பற்றி யோசித்திருக்கலாமே டைரக்டர்!

ஆனாலும் அஜீத் ரசிகர்களுக்கான அதகள படம்.

– இனியா