பாட்னா:

வாழ்நாள் முழுவதும் அரசு பங்களாவை ஒதுக்கீடு பெற்றதை எதிர்த்து நீதிமன்றம் தானாக எடுத்துக் கொண்ட வழக்கில், பீகார் முதல்வர் நிதீஸ் குமார் மற்றும் முன்னாள் முதல்வர்களிடம் விளக்கம் கேட்டு பாட்னா உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் முன்னாள் முதல்வர்களுக்கு வாழ்நாள் முழுவதும் வசிக்க தனி பங்களாவை ஒதுக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


பத்திரிக்கையில் வந்த ஆதாரத்தின் படி, இந்த வழக்கை பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா மற்றும் நீதிபதி அஞ்சனா மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட டிவிஷன் பெஞ்ச், தாமாகவே வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

வாழ்நாள் முழுவதும் பங்களா ஒதுக்கி பிறப்பித்த உத்தரவை ஏன் ரத்து செய்யக் கூடாது என கேள்வி எழுப்பி, முதல்வர் நிதிஷ்குமார், முன்னாள் முதல்வர்கள் சதீஷ்குமார் சிங், ஜெகன்னாத் மிஸ்ரா, ஜித்தன் ராம் மஞ்சி, ராப்ரி தேவி, லாலு பிரசாத் யாதவ் (இருவருக்கும் ஒரே பங்களா) ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் தனக்கு வழங்கப்பட்ட அரசு பங்களாவில் தொடர்ந்து வசிக்க அனுமதிக்க கோரி, எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை பிப்ரவரி 11-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.