புதுடெல்லி:

பொருளாதார ரீதியில் நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா இன்று நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை ஆரம்ப நிலையிலேயே சமாஜ்வாதி கட்சி எதிர்த்தது.

பொருளாதார ரீதியாக நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மத்திய கேபினட் அமைச்சரவை திங்களன்று ஒப்புதல் அளித்தது.


இதற்கான மசோதாவை மத்திய அமைச்சர் தாவர் சந்த் கெலாட் இன்று மக்களவையில் அறிமுகம் செய்து வைத்தார். நடப்பு குளிர்கால கூட்டத் தொடரின் இறுதி நாளன்று இதற்கான அரசியல் சாசன திருத்த மசோதா நிறைவேற்றப்படும்.
ஆண்டுக்கு ரூ. 8 லட்சத்துக்கு குறைவான வருவாய் உள்ளவர்களும், 5 ஏக்கருக்கு குறைவான நிலம் உள்ளவர்களும் இந்த இட ஒதுக்கீட்டைப் பெற தகுதியானவர்கள்.

இது நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது. இதனை மோடி அரசுதான் தைரியமாக கொண்டு வந்துள்ளது.
இந்த இட ஒதுக்கீட்டில் பிராமணர்கள், வியாபாரிகள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் என அனைத்துத் தரப்பினரும் பலன் அடைவார்கள் என அவர் தெரிவித்தார்.
இதற்கு ஆரம்ப நிலையிலேயே சமாஜ்வாதி கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.
50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு செய்து அரசியல் சாசன சட்ட திருத்தம் கொண்டு வருவது உச்ச நீதிமன்றத்தை மீறிய செயலாகும். 60 சதவீதமாக இட ஒதுக்கீடு அதிகரிப்பதால், இது நீதிமன்றத்தின் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும். எனவே நாடாளுமன்ற ஒப்புதலை பெற முடியாது என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.