ரயில் மறியல் போராட்டத்துக்கு பாமக ஆதரவு

Must read

rail
கடன் தள்ளுபடி கோரி உழவர்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்துக்கு பாமக ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’தமிழகத்தில் கடன் சுமையை தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. விவசாயிகளின் துயரைக் களையவும், அவர்களின் தற்கொலையை தடுத்து நிறுத்தவும் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையையும் எடுக்காதது கடுமையான கண்டனத்துக்கு உரியதாகும்.
அரியலூர் மாவட்டத்தில் கடன் தவணையை திருப்பிச் செலுத்த தவறியதற்காக அவமானப்படுத்தப்பட்ட அழகர் என்ற விவசாயி அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் கடன்சுமையை தாங்க முடியாமல் தஞ்சை மாவட்டம் கொத்தங்குடியைச் சேர்ந்த தனசேகர், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த பால்ராஜ் ஆகிய உழவர்கள் கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டனர். அதற்கு முன்பாக தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த பாலன் என்ற விவசாயி கடன் தவணையை செலுத்தாததற்காக வங்கி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரால் மிகக் கடுமையாக தாக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டார். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் 2423 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்.
உழவர்களின் தற்கொலைக்கு அவர்களின் கடன் சுமையும், விளைபொருட்களுக்கு போதிய லாபம் கிடைக்காததும் தான் காரணம் ஆகும். தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இந்த உண்மை நன்றாகத் தெரியும் என்ற போதிலும், அவற்றைக் களைவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடன் மீதான ஏலம், பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தேர்தல் வரை நிறுத்தி வைக்கும்படி ஆட்சியாளர்களிடமும், அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்தும் பயனில்லை என விவசாயிகள் சங்கங்கள் குற்றஞ்சாற்றியுள்ளன. ஆட்சியாளர்களின் இந்த போக்கைக் கண்டித்து வரும் 5&ஆம் தேதி தமிழகம் முழுவதும் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடத்தப் போவதாக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவித்திருக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை உழவர்களை உலகுக்கு சோறு படைக்கும் கடவுள்களாக பார்க்கிறது. உழவர்களின் அனைத்து கோரிக்கைகளையும், போராட்டங்களையும் பாட்டாளி மக்கள் கட்சி ஆதரித்திருக்கிறது. அந்த வகையில் வரும் 5- ஆம் தேதி தமிழகம் முழுவதும் விவசாய சங்கங்கள் நடத்தும் தொடர்வண்டி மறியல் போராட்டத்திற்கு பாமக ஆதரவளிக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

More articles

Latest article