“யுவராஜ் கைது.. தனியரசு சதி! “– சின்னமலை கவுண்டர் பேரவை குற்றச்சாட்டு!

Must read

yuvaraj-arrest-thaniyarasu-conspiracy

மிழகமே அதிர்ந்த தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்படும் “மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை” தலைவர் யுவராஜ் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். இந்த நிலையில் நமது பத்திரிகை டாட் காம் இதழுக்கு அளித்த பேட்டியில், “எனக்கோ என் அமைப்புக்கோ இந்த கொலையில் தொடர்பில்லை. என்னையும் எனது அமைப்பையும் முடக்க சிலர் சதி செய்கிறார்கள். அதன் விளைவாக என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார். தனது முகநூல் அறிக்கையிலும், “நான் உட்பட சமுதாய பற்றுள்ள இளைஞர்களை சில தலைவர்கள் தங்களது பண மற்றும் பதவிப் பசிக்காக ஏமாற்றிவிட்டார்கள். ஆனால் துரோகிகளால் நெடுங்காலம் வேசமிட முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“யார் துரோகி, யார் சதி செய்வது” என்பது உட்பட நமது பல கேள்விகளுக்கு, “இப்போது விரிவாக பேச முடியாத நிலை.. பிறகு பேசுகிறேன்” என்று பேட்டியை முடித்துக்கொண்டார்.

இந்த நிலையில், “கொங்கு இளைஞர் பேரவை தலைவரும், பரமத்தி வேலூர் தொகுதி எம்.எல்.ஏவுமான தனியரசுதான், யுவராஜ் மீது வழக்கு தொடர காரணம். அவர்தான், யுவராஜையும் அவரது இயக்கத்தையும் முடக்க நினைத்து சதி செய்கிறார்” என்று யுவராஜின் அமைப்பினர் குற்றம் சாட்டத் துவங்கியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், யுவராஜின் “சின்னமலை கவுண்டர் பேரவை”யின் திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளராக இருக்கும் கொங்கு சேதுபதியை தொடர்புகொண்டு பேசினோம்.

பொதுவாக காதல் கலப்புத்திருமணம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எல்லாரும் அந்தந்த சாதிக்களுக்குள்ள திருமணம் செஞ்சுகிட்டா எந்த பிரச்சினையும் இல்லை. தலித் இனத்துக்குள்ளேயே வேறு வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் புரிந்தால் அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், “கவுண்டனை வெட்டுவோம்… கவுண்டச்சியை கட்டுவோம்” என்று தலித் அமைப்பு தலைவர்கள் சிலர் மீட்டிங் போட்டு பேசி, அந்த இளைஞர்களை உசுப்பேற்றுகிறார்கள்”

“கோகுல்ராஜை கொன்றதாக யுவராஜ் மீது குற்றம் சாட்டப்டுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“கோகுல்ராஜ் மரணத்துக்கும் எங்கள் தலைவர் யுவராஜூக்கோ இயக்கத்துக்கோ எந்தத் தொடர்பும் இல்லை. வேண்டுமென்றே பொய் வழக்கு போட்டிருக்கிறார்கள்.”

“யுவராஜ் மீது ஈமு கோழி மோசடி புகார் இருக்கிறதே?”

“யுவராஜ் ஈமு கோழிப்பண்ணை நடத்தியதாகச் சொல்வது தவறு. அந்த மோசடியில், ஏமாந்தவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை வாங்கித்தரும் முயற்சியில் பொது நோக்கோடு ஈடுபட்டார். அவர் மீது கடத்தல் வழக்கு போட்டுவிட்டார்கள். அதுவும் பொய் வழக்குதான்!”

“யுவராஜ் எத்தனை நாள்தான் தலைமறைவாக இருப்பார்.. சட்டப்படி வழக்கை எதிர்கொள்ளலாமே?”

“தற்போது அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. ஆனால் நிச்சயமாக சட்டப்படி இந்த பொய் வழக்கை யுவராஜ் எதிர்கொள்வார்!”.

“பொய் வழக்கு பொய் வழக்கு என்கிறீர்கள். யார் சதி செய்கிறார்கள்?”

“தனியரசுவின் கொங்கு இளைஞர் பேரவையில்தான் ஆரம்பத்தில் யுவராஜ் துடிப்புடன் செயல்பட்டார். தனியரசுவின் நடவடிக்கைகள் சரியில்லை. சமீபத்தில்கூட தனியரசு ஒரு தொலைக்காட்சியில் “நாங்கள் சாதி பார்ப்பதில்லை.. காதல் கலப்பு திருமணத்தை ஆதரிக்கிறோம்” என்றெல்லாம் பேசினாரே..! தனியரசுவை பிரிந்து தனி அமைப்பு துவங்கினார் யுவராஜ். அவர் பின்னால் கவுண்டர் இன மக்கள் திரள ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் ஆத்திரமான தனியரசு, யுவராஜ் மீது பொய்வழக்கு போட தூண்டியிருக்கலாம்!” என்றதோடு பேட்டியை முடித்துக்கொண்டார்.

இது குறித்து தனியரசுவின் கருத்தை அறிய அவரது எண்ணில் தொடர்கொண்டோம். “சுவிட்ச் ஆப்” ஆகியிருந்தது.. விரைவில் அவரது கருத்துகளை கேட்டு வெளியிடுவோம்.

More articles

Latest article