பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி: ரூ. 5 லட்சம் இழப்பீட்டை எதிர்த்து மேல்முறையீடு – குழந்தைகளின் பெற்றோர் முடிவு

Must read

school 1234
திருவிடைமருதூர்:
கும்பகோணம் சங்கரராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004–ம் ஆண்டு ஜூலை 16–ந் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந்தைகள் உடல் கருகி பலியானார்கள். மேலும் 16 குழந்தைகள் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்கள். தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு ரூ. 50ஆயிரம், காயமடைந்தவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்பட்டது.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. அவர் தீ விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி தனது அறிக்கையை கடந்த மார்ச் 31–ந் தேதி உயர் நீதிமன்றத்தில் சமர்பித்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கவுல், நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் குடும்பத்தினருக்கு, தொடர்புடைய பள்ளி கல்வித்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்டோரிடம் இருந்து பெற்று தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கலாம்.
அவ்வாறு இழப்பீடு வழங்க தாமதம் ஆகும் என்பதால் இழப்பீட்டு தொகையை தமிழக அரசு வழங்கி விட்டு உரிய அமைப்புகளிடம் இருந்து பின்னர் தொகையை வசூலிக்கலாம் என ஒரு நபர் ஆணைய நீதிபதி வெங்கட்ராமன் பரிந்துரை செய்துள்ளார். அப்போது ஒரு நபர் ஆணையர் அளித்த பரிந்துரை அறிக்கையின் நகலை மனுதாரர் தரப்பு வக்கீலிடம் வழங்கவும், அறிக்கை தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 29–ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
ரூ. 5 லட்சம் இழப்பீடு தொகையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் தமிழரசன் கூறுகையில், நீதிபதி பரிந்துரைத்துள்ள தொகை மிகவும் குறைவானது. அதனை எதிர்த்து பெற்றோர் சார்பில் மேல் முறையீடு செய்ய உள்ளோம் என்றார்.

More articles

Latest article