batt
சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர்களின் பட்டியல் புதன்கிழமை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. 234 தொகுதிகளில் காங்கிரஸுக்கு 41 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 5 தொகுதிகளும், புதிய தமிழகத்துக்கு 4 தொகுதிகளும், மக்கள் தேமுதிகவுக்கு 3 தொகுதிகளும், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக விவசாயிகள்- தொழிலாளர்கள் கட்சி, சமூக, சமத்துவப்படை ஆகிய 4 கட்சிகளுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதுபோக, மீதமுள்ள 173 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளது. இதில், திமுக தலைவர் கருணாநிதி திருவாரூரில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அறிவிப்பு: இதையடுத்து, 172 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் புதன்கிழமை மாலை 4 மணிக்கு கருணாநிதி வெளியிடுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.4 கட்சிகள் திமுக சார்பில் போட்டி: மக்கள் தேமுதிக, பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள்- தொழிலாளர்கள் கட்சி, சமூக சமத்துவப் படை ஆகிய 4 கட்சிகளும் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட உள்ளன. இதனால் இவற்றின் 6 தொகுதிகளும் திமுகவின் எண்ணிக்கையிலே வரும்.