ஒவ்வொரு பாடலுமே முதல் பாடல்தான்! : பாடலாசிரியர் பிரியன் 

Must read

3.
 
தமிழ்சினிமாவில் பாடல்களுக்கு என்றுமே தனி இடம் உண்டு. வெளிவந்த காலகட்டத்திற்கு மட்டுமே படங்கள் பேசப்படும். பாடல்கள் காலம் கடந்தும் நிற்பவை. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். சில பாடல்கள் கேட்ட உடன் மனதை ஈர்ப்பவையாக அமையும். சில பாடல்கள் கேட்கக் கேட்கப் பிடித்துப் போகும். சில பாடல்கள் கேட்கும் பொழுது ஒரு உணர்வையும், படத்தோடு, படத்தின் காட்சியமைப்போடு பார்க்கும் பொழுது ஒரு உணர்வையும் தரக்கூடியவை. அவ்வகையில் தற்போது திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிச்சைக்காரன் திரைப்படத்தில் பாடலாசிரியர் பிரியன் எழுதி இருக்கும் உனக்காக வருவேன் பாடல் அனைவரின் மனதையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.
இவர் ஏற்கனவே “அஞ்சாதே படத்தில் மனசுக்குள் மனசுக்குள் புதுமழை..”, நினைத்தாலே இனிக்கும் படத்தில் செக்சி லேடி கிட்ட வாடி, உத்தமபுத்திரன் படத்தில் உசுமுலாரசே உசுமுலாரசே, வேலாயுதம் படத்தில் வேலா வேலா வேலாயுதம், நான் படத்தில் மக்காயாலா மக்காயாலா, கோலிசோடா படத்தில் ஜனனம் ஜனனம், சலீம் படத்தில் மஸ்காரா போட்டு மயக்குறியே என பல ஹிட் பாடல்கள் கொடுத்தவர்.
தற்போது சசி இயக்கத்தில், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் பிச்சைக்காரன் திரைப்படத்தில் உணர்ச்சிமிக்க பாடலாக பெருவெற்றி பெற்றிருக்கும் உனக்காக வருவேன் பாடல் குறித்து அவரிடம் கேட்ட பொழுது….
“ஒரு பாடலாசிரியனுக்கு ஒவ்வொரு பாடலுமே முதல் பாடல்தான். இதுவரை ஏறக்குறைய நானூறு பாடல்களைக் கடந்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவம். என்னைப் பொறுத்தவரையில் பொதுவான பாடல்களை விட கதையோடு பொருந்திவருகிற பாடல்களே வலிமை மிக்கவை.
அப்படிப் பார்க்கும்பொழுது “பிச்சைக்காரன்” படத்தில் எழுதிய “உனக்காக வருவேன்” பாடல் முழுக்க முழுக்க கதைக்குச் சொந்தமானது. பாடல் பற்றிய தகவலை சொல்லும்பொழுது கவித்துவமாக இல்லாமல் எளிமையாகவும் காதலின் உணர்வை பேசக்கூடியதுமாக வரிகள் இருந்தால் நல்லது என்றார் விஜய் ஆண்டனி. அதனால் எளிய மனிதர்களின் வார்த்தைகளை.. எவருக்கும் புரியக்கூடிய மிக எளிமையான வரிகளைப் பயன்படுத்தி.. முழுக்க முழுக்க காதலின் ஆழமும்.. உணர்ச்சியும் மட்டும் பயணிக்கும் பாடலை எழுதிக் கொடுத்தேன். கிட்டத்தட்ட பத்து பல்லவி, பத்து சரணங்கள் எழுதி அதில் இருந்து தேர்ந்தெடுத்த வரிகள்தான் அவை.
படம் பார்த்துவிட்டு பாடல் குறித்து திரைத்துறை பிரபலங்கள் பலர் போன் மூலம் வாழ்த்துகள் சொன்னார்கள். ஒரு நாளைக்கு குறைந்தது ஐம்பது பேருக்கு மேல் போன் வழியாகவும்.. பேஸ்புக் வழியாகவும்.. பல வழிகளிலும் வாழ்த்துகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் இத்தருணத்தில் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்”   என்று நெகிழ்வுடன் சொல்கிறார் கவிஞர் ப்ரியன்.
 

More articles

Latest article