a

ன்று அதிகாலையிலேயே அலைபேசினார் அந்த மூத்த பத்திரிகையாளர். “என்ன.. தூக்கத்தைக் கெடுத்திட்டேனா..” என்று சிரித்தபடியே ஆரம்பித்தார்.

“எழுந்திருச்சிட்டேன் சார்.. இந்த நேரத்துல போன்.. சொல்லுங்க சார்” என்றேன்.

“இளையராஜா, பத்திரிகையாளரை திட்டயதையும், உன் நண்பர் வினோதகனின் கேள்விகளையும் படிச்சேன். சிறப்பா இருந்தது” என்றவர், “தமிழ் திரைப்பட இசையில் இளையராஜா, தவிர்க்க முடியாத ஆளுமை. அவரைத் தவிர்த்துவிட்டு தமிழ்த்திரைப்பட இசை வரலாற்றை எழுதிவிட முடியாது. அவரது எத்தனையோ பாடல்கள், எத்தனை எத்தனையோ பேருக்கு அருமருந்தாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால், கேள்விகளுக்கு அப்பாற்பட்டவரா இளையராஜா?

ராமண்மா
ராமண்மா

\உலகில் விமர்சனத்துக்கு.. கேள்விகளுக்கு அப்பாற்பட்ட எவரும், எதுவும் இல்லை என்பதுதானே சரி…” என்று ஆதங்கத்தைக் கொட்டினார்.

மேலும், “நேத்து patrikai.com மூலமாக உன் நண்பர் வினோதகன் கேட்ட கேள்விகள் மிகச் சரியானவை. இன்னும் சில கேள்விகள் மெயிலில் அனுப்புகிறேன்”  என்றார்.

““நீங்களே கேட்கலாமே சார்… இளையராஜாவும் உங்களை அறிவாரே..” என்றேன்.

“நான்தான் ரிட்டயர்ட் ஆகிட்டேனே.. யாரு கேட்டா என்ன.. கேள்விதான் முக்கியம்….” என்றார்.

நான் விடாமல், “நேரடியா கேட்கிற கேள்விக்கே  இளையராஜா திட்டுறார். நீங்க எனக்கு அனுப்பி.. நான் யாருகிட்ட கொடுத்து கேட்கிறது..” என்றேன் சிரித்தபடி.

“கேள்விகள் என்பது சம்பந்தப்பட்ட மனிதரின் பதில்களுக்காக மட்டுமல்ல..  படிப்பவரின் சிந்தனையை தூண்டுவதற்காகவும்தான்…” என்றவர்,  சொன்னபடியே சற்று நேரத்தில் கேள்விகளை அனுப்பினார்.

அவை..

  1. தமிழ் நாட்டுப்புற பாடல்கள் பலவற்றை திரையில் பயன்படுத்திய இளையராஜா அதற்கும் “இசை” என்று தனது பெயரையே போட்டுக்கொண்டார். அந்தப்பாடல்களுக்கு “இசை கோர்ப்பு” என்றுதானே போட்டுக்கொள்ள வேண்டும்? பல நூறாண்டுகளாக எளிய மனிதர்களால் பாடப்படும் பாரம்பரிய பாடல்களை தனதாக்கிக்கொள்வது என்பது தவறில்லையா?
  1. வார்த்தைகளை விழுங்கும்படி இசையமைத்த முதல்வர் நீங்கள்தானே.. அதன் பிறகுதானே பலரும் அதே பாதையில் சென்றார்கள்.. இது வருத்தம் அளிக்கவில்லையா..?
  1. நிலா காயுது..  நேத்து ராத்திரி போன்ற பாடல்களில் உறவு கொள்ளும் நேரத்தில் எழும் முக்கல் முனகல்களை முதன் முதலாக புகுத்தினீர்களே… அது குறித்து விசனப்பட்டது உண்டா? (இந்த கேள்வியை நேற்றே வினோதகன் கேட்டிருந்தாலும், எனக்கும் அந்த ஆதங்கம் உண்டு என்பதால் மீண்டும் இந்தக் கேள்வி.)
  1. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சில விரும்பத்தகாத சம்பவங்களை.. அதை அறிந்தும் உங்களிடம் எந்த பத்திரிகையாளரும் கேட்காத தருணங்கள் இருந்தது. அதை செய்தியாக்ககூட யாரும் வெளியிடவில்லை. நினைவிருக்கிறதா உங்களுக்கு? (நீங்கள் என்றில்லை.. யாருடைய தனிப்பட்ட விவகாரங்களையும் கேள்விக்குள்ளாக்குவதோ, செய்தி வெளியிடுவதோ தவறு என்பதே என் எண்ணம். ஆனால் அந்த வரையறையை பெரும்பாலான ஊடகங்கள் கடைபிடிப்பதில்லை என்பதும் உண்மை. ஆனாலும் உங்கள் மீதுள்ள ஈர்ப்பு காரணமாக பத்திரிகையாளர்கள் உங்களது தனிப்பட்ட சர்ச்சைகளை தவிர்த்தார்கள்.)
  1. சிம்பொனி அமைத்ததாகச் சொல்கிறீர்கள். அதை நாங்கள் அனைவரும் நம்புகிறோம். ஆனால் அதை இதுவரை வெளியாடாதது ஏன்? இதுபற்றி உங்களிடம் கேட்கும்போதெல்லாம், பதில் சொல்ல தவிர்ப்பது ஏன்?
  1. “யாருகிட்ட வந்து பீப் பாடல் பற்றி கேக்குற.. அறிவிருக்கா” என்று பத்திரிகையாளர்களை கேட்டிருக்கிறீர்கள். அப்படியானால் ஆபாச பீப் பாடல்களை எதிர்ப்பவர்கள், கண்டிப்பவர்கள் எல்லோரும் தரமிழந்தவர்களா?

இன்னும் நிறைய கேள்விகள் இருக்கின்றன. இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறேன்.

இப்படிக்கு,

அறிவுகெட்ட பத்திரிகையாளன்.