அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சம நீதி – சம வாய்ப்பை உறுதி செய்ய வேண்டுமென்று: கலைஞர் வலியுறுத்தல்

Must read

kala1
திமுக தலைவர் கலைஞர் அறிக்கை:
‘’தமிழகத்தின் பதினைந்தாவது சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நான் இதுவரை மூன்று முறை அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறேன். நான் 23-1-2016 அன்று வெளியிட்ட முதல் அறிக்கையிலேயே தமிழகத்தில் போலி வாக்காளர்களின் எண்ணிக்கை 31 லட்சத்திலிருந்து 40 லட்சம் வரை இருக்கிறது என்றும்; அதற்கு உரிய கணக்கியல் ரீதியான அடிப்படையையும் விளக்கியிருந்தேன். அனைத்து எதிர்க் கட்சிகளின் தலைவர்களும் ஆதாரப்பூர்வமான புள்ளி விவரங்களோடு போலி வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பற்றியும் அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிட வேண்டிய அவசர அவசியம் குறித்தும் அறிக்கைகள் வெளியிட்டிருந்தார்கள்.
பின்னர் சென்னை மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 1 லட்சத்து 85 ஆயிரத்து 169 தகுதியில்லாத வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதேபோல தமிழகத்திலே உள்ள மற்ற மாவட்டங்களுக்கான வாக்காளர் பட்டியல்களில் உள்ள போலி வாக்காளர்களும், வெளி மாநில அதிகாரிகளின் மேற்பார்வையில், முழுமையான சரிபார்த்தலின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட வேண்டும் என்று தி.மு.கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தி.மு.கழகத்தின் சார்பில் பல்வேறு மாவட்டங்களிலும் தேர்தல் அதிகாரிகளிடம் வழங்கப்பட்ட போலி வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு ஓரளவுக்கு போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். எனினும், தமிழக வாக்காளர் பட்டியல்களில், ஆளும் அ.தி.மு.க.வின் அத்துமீறல்களின் காரணமாக, ஏற்கனவே இடம் பெற்றுள்ள போலி வாக்காளர்கள் அனைவரும் முழுமையாக நீக்கப்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. எனவே போலி வாக்காளர்களை நீக்குதல் பற்றிய பிரச்சினையில் தேர்தல் ஆணையம் மீண்டும் ஒருமுறை தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள்.
பொதுத் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற வேண்டுமென்றால், தேர்தலை நடத்தும் அதிகாரிகள் யாருக்கும் பாரபட்சம் காட்டாமல், நடுநிலையோடு, சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்து இருக்க முடியாது. ஆளும் அ.தி.மு.க. சார்பு அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது, தேர்தல் ஆணையத்தின்மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் குறைத்து வருகிறது என்று பரவலாகப் பேசப்படுவது தேர்தல் ஆணையத்தின் செவிகளில் விழுகிறதா என்று தெரியவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாகவே தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர்களாகவே இருப்பவர்கள், “அம்மாவின் ஆணைப்படி நல்ல மழை பெய்திருக்கிறது” என்று ஜெயலலிதாவுக்குப் புகழாரம் சூட்டி அவருடைய அனுக்கிரகத்திற்கு ஆளாகலாம் என்று எண்ணிய அதிகாரிகள், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு அனுப்பப்பட்டபோது அவரது கட்சியினர் நடத்திய ஹோமங்களிலும், பூஜைகளிலும், முளைப்பாரி ஊர்வலங்களிலும் கலந்து கொண்ட அதிகாரிகள் அனைவரும் அவரவருடைய பதவியிலேயே இருந்து இன்னும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் ஆளும் அ.தி.மு.க.வின் ஏராளமான பணத்தை, காவல்துறை வாகனங்களிலும், டாஸ்மாக் வாகனங்களிலும், ஆவின் வாகனங்களிலும் மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்வதற்குத் துணைபுரிந்த அதிகாரிகள் இதுவரை கண்டு கொள்ளப்படாமல் இருக்கிறார்களே என்ற எண்ணம் அரசியல் கட்சியினர் இடையேயும் ஊடகத்தினர் இடையயேயும் ஏற்பட்டிருப்பதை தேர்தல் ஆணையம் அறிந்து வைத்திருக்கிறதா என்று புரிந்து கொள்ள முடியவில்லை. சந்தேகத்திற்கு இடம் தரும் வகையில் நடவடிக்கைகளை வகுத்துக் கொண்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் பட்டியல், தி.மு.கழகத்தின் சார்பிலும், பல்வேறு எதிர்க் கட்சிகளின் சார்பிலும் தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அதுகுறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பது, நியாயமான தேர்தலுக்கு அடையாளமாகாது.
மேற்கு வங்காளத்தில் நடைபெறும் தேர்தல்களையொட்டி தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள 37 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் பல்வேறு நிலைகளில் இருக்கும் அதிகாரிகள் 17-3-2016 அன்றே, தேர்தல் பணிகளில் இருந்து விடுவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை அப்படிப்பட்ட நடவடிக்கை எதையும் தேர்தல் ஆணையம் இதுவரை மேற்கொள்ளாமல் இருப்பது, ஆளும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக இருந்து வரும் அதிகாரிகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிப்பதைப் போல இருக்கிறது என்று பல்வேறு தரப்பினரும் கருதுகிறார்கள்.
மேற்கு வங்காளத்தில் அசன்ஸோல் என்ற நகரை மாவட்டமாக மாற்ற உறுதி அளித்து தனது மூன்றாம் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தின்போது முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியிருக்கிறார். இது தேர்தல் விதிமீறல் என்பதால் தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
ஆனால் தமிழகத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா தருமபுரிக்குத் தேர்தல் பிரச்சாரம் செய்யச் சென்றபோது அரசு இயந்திரம் முழுமையாக பயன்படுத்தப்பட்டதாகவும், தனியார் பேருந்துகள் அனைத்தும் பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு திருப்பி விடப்பட்டு பொதுமக்கள் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டதாகவும், பிரச்சாரத்திற்கு அழைத்து வரப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஊடகங்களின் முன்னிலையிலேயே 300 ரூபாய் வீதம் பட்டுவாடா செய்யப்பட்டது என்றும், ஊடகங்களும் இதைப் படம் பிடித்து வெளியிட்டிருக்கிறது என்றும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் இராமதாஸ் நேற்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் இருப்பதால் தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன; அ.தி.மு.க.வின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டும் முழுமையாகக் காட்டப்படுகின்றன; மேலும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் அ.தி.மு.க. நிகழ்ச்சிகள் மட்டும்தான் ஒளிபரப்பாகின்றன. எனவே தேர்தலின்போது “சமவாய்ப்பு” என்பதன் அடிப்படையில், தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தை தேர்தல் ஆணையமே எடுத்துக் கொண்டு தேர்தல் முடியும் வரை தன்னுடைய கட்டுப்பாட்டில் நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை நியாயமான அந்தக் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தால் கோடிக்கணக்கில் கைப்பற்றப்பட்ட பணம் அனைத்தும் வணிகர்கள், தங்களுடைய வியாபார நடவடிக்கைகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டதாகும். அதிகாரிகளின் துணையோடு அரசாங்கத்தின் வாகனங்களில் ஆளும் அ.தி.மு.க. வண்டி வண்டியாகப் பணம் கொண்டு சென்றதாகப் பல்வேறு தகவல்கள் நாளேடுகளில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில், அதைப் பற்றிச் சிறிதாவது தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தாமல் கண்களைப் பொத்திக் கொண்டிருப்பது நடுநிலையைக் காப்பாற்றுவதாகாது.
எனவே தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்கள் அனைவரையும் முழுமையாக நீக்கி, ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் அதிகாரிகளை உடனடியாகத் தேர்தல் பணிகளில் இருந்து விடுவித்து, மேற்கு வங்கத் தேர்தலுக்கு ஒரு அணுகுமுறை, தமிழகத்தின் தேர்தலுக்கு வேறு அணுகுமுறை என்ற பாகுபாட்டை அகற்றி, இந்தியத் தேர்தல் ஆணையம் அரசியல் சட்டத்தின் அங்கம் என்ற முறையில், சுயாட்சி பெற்று நடுநிலை வகிக்கும் தனிப் பெரும் அமைப்பு என்பதையும், இந்திய மக்களின் நம்பிக்கை முனையம் என்பதையும் நிலைநாட்டி, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சம நீதி – சம வாய்ப்பை உறுதி செய்ய வேண்டுமென்று தி.மு.கழகத்தின் சார்பில் மீண்டும் ஒரு முறை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்!’’

More articles

Latest article