டில்லி,
கோகுல்ராஜ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள யுவராஜின் ஜாமினை உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்தது.
தமிழகத்தை பரபரப்பாக்கிய சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட யுவராஜின் ஜாமினை ரத்து செய்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 24ம் தேதி பள்ளி பாளையம் அடுத்த கிழக்கு தொட்டி பாளையம் ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜ் என்ற இளைஞரின் தலை தனியாக உடல் தனியாக கிடந்தது.
ஆரம்பத்தில் இது தற்கொலை என்று வழக்கு பதிவு செய்த போலீசார், பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கையை தொடர்ந்து, அது கொல செய்யப்பட்டு உடலை வீசியிருப்பது தெரிய வந்தது. அதையடுத்து, தற்கொலை வழக்கு கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தியது.
விசாரணையில் காதல் விவகாரத்தில் கோகுல்ராஜ் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுத்து யுவராஜ் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனுமீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ,யுவராஜின் ஜாமீனை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கை .18 மாதங்களுக்குள் வழக்கை விசாரித்து முடித்து தீர்ப்பு கூறும்படி கீழமை நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.