தமிழகத்தில் பீகாரி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படும் போலி வீடியோக்களை பரப்பியதற்காக கடந்த ஆண்டு தமிழ்நாடு காவல்துறையால் கைது செய்யப்பட்ட யூடியூபர் மணீஷ் காஷ்யப் ஏப்ரல் 25 ம் தேதி வியாழனன்று பாரதிய ஜனதா கட்சியில் (BJP) சேர்ந்தார்.

கட்சியில் சேர்ந்த பிறகு, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா-வைச் சந்தித்தார்.

சிறையில் இருந்து தன்னை விடுவிக்க உதவிய கட்சிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாஜகவில் இணைந்ததாக அப்போது அவர் கூறினார்.

மார்ச் 2023 முதல் வாரத்தில், தமிழ்நாட்டில் வட இந்தியத் தொழிலாளர்கள் தாக்கப்பட்ட பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின. இந்த வீடியோக்கள் பொய்யானவை என்றும், மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க பரப்பப்பட்டு வருவதாகவும் அப்போதைய தமிழக காவல்துறை இயக்குநர் (டிஜிபி) சைலேந்திர பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

பின்னர், மணீஷ் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டு, மாநிலத்திற்கு அழைத்து வரப்பட்டார். பீகாரின் மேற்கு சம்பரானில் உள்ள ஜகதீஷ்பூர் காவல் நிலையத்தில் மார்ச் 18ஆம் தேதி சரணடைந்தார். மாநிலத்தில் பீஹாரி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது குறித்து தவறான செய்திகள் மற்றும் வீடியோக்களை பரப்பியதற்காக மதுரை சைபர் கிரைம் பிரிவால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஏப்ரல் 2023 இல், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். நவம்பர் 2023 இல், மனீஷுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது, இது NSA இன் கீழ் அவரது காவலையும் ரத்து செய்தது.