தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய யூடியூபர் மணீஷ் காஷ்யப் பீகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

அண்மையில் கோவை நீதிமன்றம் அருகே இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விடியோவை பதிவிட்டு பீகார் மாநில புலம் பெயர் தொழிலாளர்களை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தாக்குவதாக பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக வெளியான வீடியோ குறித்து விளக்கமளித்த தமிழக காவல்துறை இது முற்றிலும் தவறான தகவல் என்றும் இருமாநில நலனுக்கு எதிராக வதந்தி பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக பீகார் மற்றும் தமிழ்நாடு காவல்துறை பல்வேறு வழக்குகளை பதிவு செய்து யூடியூபர் மணீஷ் காஷ்யப்-பை தேடிவந்தது.

இந்த நிலையில், போலி வீடியோ பதிவிட்ட வழக்கில் தேடப்பட்ட மணீஷ் காஷ்யப் பீகார் போலீசாரிடம் இன்று சரணடைந்தார் இதனைத் தொடர்ந்து இவரிடம் தமிழக போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.