சென்னை: கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிவிக்கக்கூடாது என தடை உள்ள நிலையில், அதை மீறி அதிகபிரசிங்கித்தனமாக விழா எடுத்து, குழந்தையின் பாலினத்தை அறிவித்து, சர்ச்சையை ஏற்படுத்திய பிரபல சாப்பாட்டு புகழ் யுடியூபர் இர்பான், கடுமையான எதிர்ப்பு மற்றும் அரசின் நோட்டீசை தொடர்ந்து பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக வீடியோ வெளியிட இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்தவர் யுடியூபர் இர்பான். இவர் சாப்பாடு மற்றும் உணவு சம்பந்தமான வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானார். தற்போது சினிமா விமர்சனங்கள், வெவ்வேறு பகுதிகளின் உணவு வகைகள், வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள், பிரபலங்களுடன் நேர்காணல்கள், பிராங்க் நிகழ்ச்சிகள் என பல்வேறு வகையான பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இதன் மூலம், யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக ஊடகங்களில் சுமார் 4 மில்லியன் ஃபாலோயர்களை அவர் கொண்டு பணத்தை குவித்து வருகிறார். மேலும் பணத்தையும் புகழையும் ஈட்டும் வகையில், வீயூவ்ஸ்காக மனைவி வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து வீடியோ வெளியிட்டு சிக்கிக்கொண்டார்.
கடந்த ஆண்டு அவருக்கு திருமணம் நடைபெற்றது. அது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டார். இந்த நிலையில், இர்பானின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் தனது குழந்தையின் பாலினம் குறித்து அறிய துபாய் அழைத்துச்சென்று, அங்கு குழந்தையின் பாலினம் தொடர்பாக சோதனை செய்து, அதன் ரிப்போட்டை கொண்டு வந்ததுடன், சென்னையில், அதற்காக ஒரு விழாவை நடத்தினார். அதாவது, தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் நிகழ்ச்சியை நண்பர்கள், குடும்பத்தினருடன் கொண்டாடினார். அப்போது இருவரும் பலூனை துப்பாக்கியால் சுட்டு அதன்மூலம் குழந்தை ஆணா, பெண்ணா என தெரிவிக்கப்போவதாக அறிவித்தார். அதையும் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார். அந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இரப்ன் வெளியிட்ட வீடியோவில், தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்தியாவில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பது குறித்து அறிவிக்க தடை உள்ளது. அதாவது, குழந்தை பிறப்பதற்கு முன்பாக, தமிழகத்தில் பாலினத்தை முன்கூட்டியே கண்டறிவது 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றமாகும்.
இந்த நிலையில் இர்பான் இந்திய சட்டத்தை மீறி, துபாய் சென்று குழந்தையின் பாலினம் கண்டறியும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, அதனை தமிழ்நாட்டில் யூடியூபில் வெளியிட்டது குற்றச்செயல் என சமூக வலைளதளங்களில் கடுமையாக விமர்சனத்தை ஏற்படுத்தியது. இர்பான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதைத்தொடர்து, இர்பானுக்கு விளக்கம் கேட்டு தமிழக சுகாதாரத் துறை, அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இர்பான் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க காவல் துறையிலும் புகார் அளிக்கவும் தமிழக சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. மேலும், இர்பான் வெளியிட்ட வீடியோவை நீக்கும்படி யூடியூப் நிறுவனத்திற்கு தமிழக சுகாதாரத்துறை கடிதம் எழுதியது.
இதையடுத்து, கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து வெளியிட்ட வீடியோவை யூடியூப் பக்கத்தில் இருந்து இர்பான் நீக்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, யுடியூபர் இர்பான் தமிழ்நாடு அரசிடம் மன்னிப்பு கோரியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இர்பானை தொடர்பு கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இர்பான் மன்னிப்பு கோரியுள்ளார். மன்னிப்பு கோரிய வீடியோவை வெளியிட உள்ளதாகவும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே இர்பான் மீது சட்ட நடவடிக்கைகள் தொடரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.