நெல்லை,

கோக், பெப்சி ஆலைகள் தாமிரபரணியில் இருந்து நீர் எடுக்க மதுரை ஐகோர்ட்டு கிளை அனுமதி அளித்ததை கண்டித்து நெல்லை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள் என தினமும் ஒரு போராட்டம் ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து நடைபெற்று வருகிறது

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் செயல்படும் தனியார் கோக், பெப்சி  போன்ற  பன்னாட்டு குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுக்க அனுமதி அளித்தால் குடிநீர் பிரச்சினை ஏற்படும், தாமிரபரணியை நம்பி விவசாயம் செய்யும் 5 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கடந்த நான்கு நாட்களாக நெல்லையில் போராட்டங்கள் நடந்துவருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது நெல்ல கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இந்த ஆர்பாட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பங்கேற்றார். அப்போது அவர்  செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தாமிரபரணியைக் காக்க சட்டப்போராட்டம் நடத்தினோம் ஆனால் நீதி கிடைக்கவில்லை. ஆகவே, மாணவர்கள், இளைஞர்கள்தான் தாமிர பரணியைக் காக்க முன்வரவேண்டும் என இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தாமிரபரணி ஆறு பாபநாசத்தில் உற்பத்தியாகி வற்றாத ஜீவ நதியாக பல கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது.  தற்போது,  நமது நதியை குளிர்பான ஆலைகளுக்கு தாரை வார்த்து விட்டோம். அவர்கள்  பல லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சுகின்றனர்.

தாமிரபரணி குறுக்கே  தடுப்பணை கட்டியதால் பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாழாகிவிட்டன என்றார்.

மேலும்,  எதிர்கால சந்ததியினர் காக்கப்பட வேண்டுமெனில் தாமிரபரணியில் குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.