சென்னை:

மொழி சிறுபான்மை பள்ளி மாணவர்கள், இந்த ஆண்டும், தமிழ்மொழி பாடத்தேர்வு எழுத விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக பள்ளி கல்வித் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு தமிழ் மொழி பாடத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கடந்த 2006 ம் ஆண்டு சட்டம் ஒன்றை பிறப்பித்தது. அதில் சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ்மொழி பாடத்தை கட்டாயம் படிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் இத்திட்டம், ஆண்டுதோறும் படிபடியாக நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன்படி கடந்த ஆண்டு 10 ம் வகுப்பு மாணவர்கள் தமிழ்மொழி பாடத்தேர்வு எழுதவேண்டும்.

ஆனால் மொழி சிறுபான்மை பள்ளிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.  தமிழ் மொழி பயிற்றுவிக்க தமிழாசிரியர்களை அரசு நியமிக்கவில்லை, அதனால் இந்தாண்டு தமிழ்ப்பாடத் தேர்வு எழுத விதிவிலக்கு அளிக்கவேண்டும் என கோரப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் உயர்நீதிமன்றம்  10ம் வகுப்பு தேர்வில், தமிழ் மொழி பாடத்தேர்வு எழுத, மொழி சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டது.

தற்போது, 10ம் வகுப்பு தேர்வு தொடங்க இருப்பதால் மொழி சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தன. அதில், தமிழ் மொழி பாடம் தேர்வு எழுத விலக்கு அளிக்கவும், அதற்கு பதில், தங்கள் தாய் மொழி பாடத்தில் எழுத அனுமதிக்கவும் கோரப்பட்டது.

வழக்கறிஞர்களின் வாதங்களுக்கு பின், 2016 மார்ச்சில் பிறப்பித்த உத்தரவு, இந்த ஆண்டும் தொடரும் என்றும் அரசு அளித்திருக்கும் அவகாசத்தில் விண்ணப்பித்தோருக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.