சேலம்: தவெக தலைவர் விஜய் நிகழ்ச்சியில் மயங்கி விழுந்து வடமாநில இளைஞர் ஒருவர் பலியானிர். விசாரணையில் உயிரிழந்த இளைஞருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

சேலம் சீலநாயக்கன்பட்டி தாளமுத்து நடராஜன் திடலில் பிப்ரவரி 13ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கூட்டம் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார். முன்னதாக இக்கூட்டத்திற்கு வர காவல்துறையிர் கடுமையான கெடுபிடிகளை அறிவித்தனர். அதன்படி, 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், விஜய் வருகையையொட்டி 5 டிஎஸ்பிக்கள், 8 இன்ஸ்பெக்டர்கள் என 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கூட்டம் நடைபெறும் திடலுக்கு வந்தவர்களுக்கு அக்கட்சி நிர்வாகிகள் சார்பில் தண்ணீர் பாட்டில், பிஸ்கட், ஓஆர்எஸ் வழங்கப்பட்டது.
இதனிடையே, தவெக தலைவர் விஜய் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து இன்று காலை 10:45 மணிக்கு புறப்பட்டு, காலை 11:30 மணிக்கு சேலம் காமலாபுரம் விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து கார் மூலம் கூட்டம் நடக்கும் சீலநாயக்கன்பட்டி மைதானத்திற்கு வந்த விஜய், தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
வழக்கம் போல இந்த கூட்டத்திலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. சேலம் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் சீலநாயக்கன்பட்டி மைதானத்திற்கு வருகை தந்த விஜய்க்கு ஆயிரக்கணக்கான மக்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில், இந்த கூட்டத்திற்கு வந்திருந்த சிராஜ் (வயது 35) என்ற வடமாநில இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர், சேலம் செவ்வாய்பேட்டையில் வெள்ளி பட்டறை தொழில் செய்து வந்தவர் சிராஜ். இவருக்கு ஏற்கெனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில், அண்மையில் ஆஞ்சியோ சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிராஜ் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விஜய் கூட்டத்தில் பங்கேற்க வந்த இளைஞர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
[youtube-feed feed=1]