சென்னை: முன்விரோதம் காரணமாக, இளைஞர் ஒருவர்  சிலரால் உயிரோட பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில்,   சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த  வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் காரணமாக நெமிலி அருகே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது.

ஜனவரி 16ந்தேதி அன்று நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த  சிலர்,  திருமால்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிவிட்டு நடந்து வந்து கொண்டிருந்த சூர்யா என்கிற தமிழரசன் மற்றும் விஜயகணபதியை,  அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த திருமால்பூரைச் சேர்ந்த பிரேம்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் வழிமறித்து தகராற்றில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், ஆத்திரமடைந்த அவர்கள் கேனில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை இருவர் மீதும் ஊற்றியதாகவும், அதையடுத்து பிரேன் என்பவர் தீ வைத்துக் கொளுத்தி விட்டு, தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, இருவரும் வலி தாங்க முடியாமல் அலறித் துடித்துள்ளனர். அலறல் சத்தம் கேட்டம் அப்பகுதியில் விரைந்து வந்து, பற்றி எரிந்த தீயை அணைத்துள்ளனர். ஆனால், அதற்கு இளைஞர்கள் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. அவர்களை மீட்டு மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் சேர்த்தனர்.  இதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்  தனிப்படை  அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.  இதைத்தொடர்ந்து,  பிரேம் உள்ளிட்ட நண்பர்கள் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த  நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 6 நாட்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சூர்யா என்கிற தமிழரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் நெமிலி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து,  இந்த சம்பவத்தின் காரணமாக அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் திருமால்பூர் மற்றும் நெல்வாய் பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.