கோவில்பட்டி:

“சீமை கருவேல மரங்களை அகற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் நடந்த  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு,  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது அவர், பேசியதாவது:

“கோவில்பட்டியில் அடுத்த மாதம் (மார்ச்)  எட்டாம் தேதி ம.தி.மு.க. சார்பில் மகளிர் மாநாடு நடக்க இருக்கிறது. இந்த நிகழ்வில்  அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும், “மதுரை ஐகோர்ட்டு கிளையில், சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று மனுதாக்கல் செய்தேன். தற்போது  அந்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சீமை கருவேல மரங்கள் கோடைக்காலத்திலும் செழித்து வளரும். ஏனென்றால்,  இதன் வேர்கள் நிலத்தடி நீரையும், இதன் இலைகள் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் கூட உறிஞ்சக் கூடியவை. இதனால்தான் கிராமங்களில் கருவேல மரங்களின் நிழலில் கால்நடைகளை கட்டி வைக்க மாட்டார்கள். சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் சீமை கருவேல மரங்களை  அகற்றுவது அவசியமாகும்.
ஒவ்வொரு ஊரிலும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் ஒன்றுபட்டு சீமை கருவேல மரங்களை அகற்ற முன்வர வேண்டும். வசதி வாய்ப்பு உள்ளவர்கள் பொக்லைன் இயந்திரங்களை வழங்கி சீமை கருவேல மரங்களை அகற்ற உதவ வேண்டும். தினமும் காலையிலும், மாலையிலும், விடுமுறை நாட்களிலும் சீமை கருவேல மரங்களை அனைவரும் சேர்ந்து அகற்ற வேண்டும். இதனால் எதிர்காலத்தில் வறட்சி ஏற்படாமல் தடுக்கலாம்” என்றார்.

மேலும் அவர், “தமிழகத்தில் இருந்து ஆற்று மணலை கடத்தி,  கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கு கடத்தி செல்வது நடக்கிறது. இதைத் தடுக்க வேண்டும்.

மதுவை ஒழிக்க வேண்டும். மதுவுக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுத்து நிறுத்த வேண்டும்.  முல்லை பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட எட்டு வருடங்களாக  போராடினேன். காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மீத்தேன் எரிவாயு திட்டத்தை தடுத்து நிறுத்தினேன். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை வடமாநில நிறுவனத்துக்கு தாரை வார்க்க முயன்றதை தடுத்து நிறுத்தி, அதனை லாபகரமாக இயக்க ஏற்பாடு செய்தேன்.

இப்போது சீமை கருவேல மரங்கள் ஒழிப்பில் ஈடுபட்டுள்ளேன். இதில் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று வைகோ தெரிவித்தார்.