முதல்வர் எடப்பாடி – கொறடா ராஜேந்திரன்

சென்னை,

நாளை நடைபெற இருக்கும் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்துகொண்டு வாக்களிக்க வேண்டும் என்று அதிமுக கட்சி கொறடா அறிவித்து உள்ளார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்சினையை தொடர்ந்து ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியாகவும், சசிகலா தலைமையில் மற்றொரு அணியாகவும் உள்ளது.

இந்நிலையில் சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமியை பதவி ஏற்க அழைத்த கவர்னர் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

இதையடுத்து நாளை சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் அறிவித்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்  அனைவரும், நாளை நடைபெறும்  நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அவசியம் சட்டமன்றத்திற்கு வரவேண்டும் எனவும், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும் கொறடா ராஜேந்திரன்  உத்தரவிட்டுள்ளார்.

சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் தற்போது கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நாளை சட்டமன்ற வாக்கெடுப்பில் கலந்துகொள்ள நாளை காலைதான் கூவத்தூரில் இருந்து நேராக சட்டமன்றத்திற்கு கூட்டி வரப்பட இருக்கிறார்கள்.

சட்டமன்றத்தில் ஒவ்வொரு கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும், அந்த கட்சியின் கொறடா உத்தரவுபடி தான் வாக்களிக்க வேண்டும். அதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்பது குறிப்பிடத்தக்கது.