முதல்வர் ஓ.பி.எஸ். வாக்குறுதி அளிக்க வேண்டும்!: போராட்டத்தைத் தொடரும் இளைஞர்கள் பேட்டி

Must read

சென்னை,

ல்லிக்கட்டு போராட்டக்காரர்களை போலீசார் நேற்று வலுக்கட்டாயமாக வெளியேற்றிய போதும், இன்னும் சிலர் மெரினாவில் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

அவர்கள் முதல்வர் ஓ.பி.எஸ். வாக்குறுதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்காக பிறப்பிக்கப்பட்டுள்ள சட்டத்தை 9வது பிரிவில் சேர்க்க முதல் அமைச்சர் உறுதி அளித்தால் போராட்டம் கைவிடப்படும் என்று சென்னை மெரினாவில் போராட்டத்தை தொடரும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

தடியடி நடத்திய காவல்துறையினர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளனர்.

நேற்று இரவு (திங்கள்கிழமை)  சென்னை மெரீனாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பில் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் ஜான் கார்த்திக்,

சில ஊடகங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்தனர் என்று செய்திகள் வருகிறது. நாங்கள் மீனவ மக்களின் உறுதுணையோடு மிகவும் கட்டுக்கோப்பாக இருக்கிறோம்.

எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

போராட்டக் குழு சார்பாக தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் சில கோரிக்கைகளை வைக்கிறோம். ஒட்டுமொத்த போராட்டக் குழு சார்பாக அரசுக்கு 3 கோரிக்கைகள் வைக்கிறோம். எங்களுடைய 3 கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.

முதலாவதாக, இந்த போராட்டத் தால் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். வழக்கு போட்டிருந்தால் உடனடியாக வாபஸ் பெற வேண்டும். 

இரண்டாவதாக, இந்த போராட்டத்தில் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் உயிரிழந்து உள்ளனர்.  அவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். அந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும். 

மூன்றாவதாக ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசு இன்று செய்த சட்டத்திருத்தத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனாலும் முழுமையான சட்டத்திருத்தமாக படவில்லை. ஒரு சிலர் சரி என்று தெரிவித்தாலும், பெரும்பாலானோர் அதனை ஏற்கவில்லை.

இந்த சட்டத்திருத்ததை 9வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்களது முதன்மையான கோரிக்கையாகும்.

முதல்வர் இதற்கான அறிவிப்பை அறிவித்தால் அடுத்த 10 நிமிடத்தில் நாங்கள் கலைவோம். அதுவரைக்கும் எங்களது போராட்டம் தொடரும்.

நாங்கள் 8 நாள் கஷ்டப்பட்டோம். அதற்கு முதல்வர் உறுதிமொழி அளிக்க வேண்டும். 

7 நாள் போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்த காவல்துறைக்கு நன்றி. ஆனால் நேற்று அவர்கள் செய்த காரியம் மிகப்பெரிய மனவருத்ததை அளிக்கிறது. இதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். வெளியேற இனறு மாலை  வரை, காலஅவகாசம்  கொடுத்துள்ளனர்.

அதன் பிறகும் போராட்டக்காரர்கள் கலையவில்லை என்றால், அவர்களை எப்படியாவது  அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக உள்ளனர்.

இதன் காரணமாக, தமிழக காவல் துறையின் கடலோர காவல்படையினர், கடலோரத்தில் இரவும் பகலும் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

போலீஸார் தங்களை கண்காணித்து வருகிறார்கள் என்பதையும், அங்கிருக்கும் இளைஞர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரிடமும், ‘தமிழன்டா’ என்ற கோஷம் மேலோங்கி இருக்கிறது.

More articles

Latest article