ஆர்கே செல்லுலாயிட்ஸ் மற்றும் கலால் க்ளோபல் என்டர்டயின்மண்ட் பட நிறுவனங்கள் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இதில் கே. எஸ். ரவிக்குமார், தர்ஷன், லொஸ்லியா, யோகி பாபு, சுரேஷ் மேனன், பூவையார், பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் முக்கிய வேடத்தில் ரோபோ ஒன்றும் நடித்திருக்கிறது. ஆர்வி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு நேற்று பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் விக்ரமன், ஆர்கே செல்வமணி, ஆர் வி உதயகுமார், பேரரசு, கௌரவ் நாராயணன், பொன் குமரன், கல்யாண், ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் டி சிவா உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
‘கூகுள் குட்டப்பா’ படத்தின் முன்னோட்டத்தை இயக்குநர்கள் விக்ரமன், ஆர்கே செல்வமணி, ஆர் வி. உதயகுமார் பேரரசு ஆகியோர் வெளியிட, படத்தில் முக்கிய வேடத்தில் இடம்பெற்றிருக்கும் ரோபோ மேடையில் தோன்றி பெற்றுக்கொண்டது.
இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசுகையில், ”1980களில் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பர்க் இதுபோன்ற ரோபோட்டை மையப்படுத்தி திரைப்படங்களை உருவாக்கியிருக்கிறார். எனக்கும் இதுபோன்ற ரோபாட்டுகளை மையப்படுத்தி படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தை பார்த்தேன்.
அந்த படம் தமிழில் வெளியானால் மிகப் பெரும் வெற்றி பெறும் என்று அப்போதே உறுதியாக கூறினேன். குழந்தைகள் முதல் அனைவரும் ரசிக்கும் வகையில் ‘கூகுள் குட்டப்பா’ உருவாகி இருப்பதால் இப்படம் நிச்சயம் வெற்றி பெறும். ஒரு மனிதத்திற்கும் இயந்திரத்திற்கும் இடையேயான உணர்வுபூர்வமான பரிமாற்றத்தை விளக்கும் படைப்பாக உருவாகி இருக்கிறது. தற்போதைய நிலையில் சக மனிதர்களிடத்தில் காண்பிக்காத அன்பை, ஒரு இயந்திரம் காண்பிக்கிறது என்றால் நிச்சயமாக வெற்றி பெறும்.
இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இன்று வரை அவருடைய குருநாதரான விக்கிரமனுக்கு உரிய மரியாதையை அளித்து வருகிறார். அவரும், அவருடைய சீடர்களும் இன்றளவிலும் குருவிற்கு அளித்துவரும் மரியாதை, அவர்களுக்கு வெற்றியை தேடித்தரும். ஆனால் இன்றைய சூழலில் இளம் இயக்குநர்கள் யாரும் மூத்த இயக்குநர்களுக்கு மரியாதை அளிப்பதில்லை.
அண்மையில் ஒரு இளம் இயக்குநரின் படைப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை பார்வையிட்டு, படம் நிறைவடைந்த பின் அந்த இளம் இயக்குநருக்காக காத்திருந்து, அவரிடம் பாராட்டை தெரிவித்தபோது, அவர் மிக எளிதாக ஒரே வார்த்தையில் பதிலளித்து கடந்து சென்றுவிட்டார்.
இன்றைக்கு கன்டென்ட் தான் வெற்றி பெறும். இயக்குநர் சங்கத்திற்கு தலைவராகத் தேர்வாகியுள்ள ஆர்கே செல்வமணி, இயக்குநர் சங்கத்தில் உள்ள திறமையான இயக்குநர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் நல்லதொரு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
இந்தத் திட்டத்தில் 300 உதவி இயக்குநர்கள் பங்களித்து, அருமையான கதைகளை அளித்திருக்கிறார்கள். இந்தத் தருணத்தில் தயாரிப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். நீங்கள் படங்களைத் தயாரிக்க வேண்டுமென்றால், எங்கள் சங்கத்தை அணுகி புதிய கதைகளை கேளுங்கள். அதில் உங்களுக்கு பிடித்த கதையை படமாக தயாரிக்கலாம்.
திறமைவாய்ந்த இளம் இயக்குநர்கள் எங்களது சங்கத்தில் தயாராக இருக்கிறார்கள். தமிழ் திரை உலகம் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை, தயாரிப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.