பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ், ஹீரோயின்கள் சாயா சிங், சாக்ஷ்சி அகர்வால் ஆகியோர் சிறப்பான ஒரு பணியைச் செய்திருக்கிறார்கள்.

அதற்கு முன் ஒரு முக்கியமான விசயத்தை தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்திய மக்களை அச்சுறுத்தும் முக்கிய நோய், சிறுநீரக ( கிட்னி) கோளாறு; 100இல் 40 இந்தியர்கள், சிறுநீரக நோயால் பாதிக்கப் படுகின்றனா்.

உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிப்பது, கழிவுகளை வெளியேற்றுது ஆகிய பணிகளை சிறுநீரகம் செய்கிறது.

நம்மில் பலருக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் உண்டு. இவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட அதிக அளவு வாய்ப்பு இருக்கிறது.

இதை அறிந்து உரிய நேரத்தில் சிகிச்சை பெற பலர் தவறிவிடுகிறார்கள். டயாலிசிஸ், மாற்று சிறுநீரகம் பொறுத்துதல் என்று பல்வேறு வழிகளில் சிறுநீரக கோளாரை தடுக்க மருத்துவர்கள் முயற்சிக்கிறார்கள்.

வருடத்துக்கு ஒரு முறையாவது சிறுநீரகம் குறித்த சோதனையை செய்துகொள்ள வேண்டும். அதை நம்மில் பலர் செய்வதில்லை.

இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, உலகம் முழுதும் மார்ச் இரண்டாவது வியாழக்கிழமை ‘சிறுநீரக பாதுகாப்பு விழிப்புணர்வு தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.

இதற்காக, சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனை ‘அனைவருக்கும் சிறுநீரக ஆரோக்கியம்’ என்ற விழிப்புணர்வு நடைப்பயணத்தை பெசன்ட் நகர் கடற்கரையில் நடத்தியது.

இரண்டு கிமீ தூரத்திலான இந்த நடைபயணத்தை, இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், நடிகைகள் சாயா சிங், சாக்ஷி அகர்வால் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். அதோடு பலூன்களையும் பறக்கவிட்டனர்.

இருநூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் நடைப்பயணத்தில் பங்கேற்றனர்.

அவர்கள், சிறுநீரக கோளாறுகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது, சிறுநீரகக் கோளாறுகளைத் தடுப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

அளவுக்கு அதிகமான மது, காபி, உப்பு, சிவப்பு இறைச்சி, செயற்கை இனிப்பு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. இதன் காரணமாக சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பல நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.