தம்பதிகளை ‘கொஞ்ச’ வைத்த கொரோனா லாக்டவுன்…
‘கொரோனா’… இன்று உலக மக்களிடையே  மறக்க முடியாத ஒரு வார்த்தையாக மாறிவிட்டது. பெயரைக் கேட்டதுமே துள்ளிக்குதித்து அப்பால போய் நிற்க வேண்டிய பீதியை ஏற்படுத்தி உள்ளது. தொழிற்சாலைகளால் உருவான மாசுபாட்டில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணியவேண்டிய சூழலை மாற்றி, தற்போது வைரஸ் தொற்று பரவலில் இருந்து பாதுகாக்க வேண்டி, முகக்கவசம் அணிய வேண்டிய சூழலை உருவாக்கி உள்ளது.
2020-ஐ வைரஸ் தாக்கிவிட்டது! அதனால், இந்த ஆண்டை நீக்கிவிட்டு மீண்டும் ‘ரீ இன்ஸ்டால்’ செய்தால் சரியாகிவிடும் என்றொரு ‘மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது… ஆனால், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது,  அவ்வளவு எளிதல்ல என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து  உள்ளது.

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் தம்மாத்துண்டு வைரஸ் இயற்கையாக பரவியதா, செயற்கையாக உருவாக்கப்பட்டதா என்ற பஞ்சாயத்து ஒருபுறம் போய்க்கொண்டிருக்கிறது. அதே வேளையில் அதன் பாதிப்பு மற்றொருபுறம் ஏராளமான உயிர்களை எடுத்து வருகிறது.
இருந்தாலும் பெரும்பாலான மக்கள் இயந்திரத்தனமான வாழ்க்கையை விட்டு, அமைதியான எளிய வாழ்க்கைக்கு மாற இந்த கொரோனா பேருதவி ஆற்றி உள்ளது என்றால் அது மிகையாகாது.
மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ள இதே கொரோனாதான்  இன்று குடும்பத்தினரிடையே பாசப்பிணைப்பை உருவாக்கி உள்ளது மட்டுமல்லாமல் பல்வேறு பாரம்பரிய நடைமுறை களை மீண்டும் நினைவுபடுத்தி உள்ளது. மேலும், தம்பதிகள் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தி, ஏராளமான பெண்கள் கர்ப்பம் தரிக்கவும் காரணமாகி உள்ளது.
கொரோனா லாக்டவுன் காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளதால், கர்ப்பம் தரிப்பு அதிகரித்து இருப்பதாக ஐ.நா.வின் குழந்தைகள் நிதி அமைப்பு யுனிசெப் தெரிவித்து உள்ளது. உலகமெங்கும் ஏறக்குறைய 11 கோடியே 60 லட்சம் குழந்தைகள் பிறக்கப்போகின்றன என்று தெரிவித்திருப்பதுடன், இந்தியாவை பொறுத்தமட்டில், டிசம்பர் மாதத்தில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும் என்று தெரிவித்து உள்ளது.
யுனிசெப்-ன் ஆய்வுகளை உறுதிப்படுத்தும் வகையிலேயே, இந்தியாவில் நடத்தப்பட்ட சில ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. கொரோனா தொடர் லாக்டவுனால் சிலர் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக கூறப்படும் நிலையில், பல இளம்தம்பதிகள் இடையே செக்ஸ் உறவு கூடிப் போயிருச்சு என்று தெரிவித்து உள்ளன.
வேலை, வேலை என்று 24 மணி நேரமும் இயந்திரத்தனமாகவும், பணம்  சம்பாதிக்கும் ஆசையினால்,  மென்பொருள் நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருபவர்கள்,  குடும்பம், மனைவி, பாலியல் உறவு போன்றவற்றை மறந்து வாழ்ந்து வந்தனர். சில காலங்களுக்கு பின்னர், பின்னர் குழந்தை இல்லையே என்று ஏக்கத்துடன் சம்பாதித்த பணத்தை எல்லாம் லட்சம் லட்சமாக கொண்டுபோய், குழந்தை கருத்தரிப்பு மையங்களில் கொட்டி வந்தனர்.
ஆனால், இந்த லாக்டவுன் அதுபோன்ற இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
கொரோனா லாக்டவுன் இளம்தம்பதிகள் இடையே செக்ஸ் ஆசையை தூண்டி, கர்ப்பத்துக்கு வழி வகுத்துள்ளது பல்வேறு ஆய்வுகள் மூலம்  உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பல மாநிலங்களில் பன்மடங்கு விற்பனையாகி வரும் ஆணுறைகள், கர்ப்ப தடை மாத்திரைகள், கர்ப்ப பரிசோதனை கருவிகளே இதற்கு ஆதாரம்… இதன்மூலம்   தம்பதிகள் சந்தோஷமாக கொரோனா லாக்டவுனை அனுபவிக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த சமாச்சாரம் தொடர்பாக ஆய்வு நடத்திய டன்ஸோ நிறுவனம், கொரோனா லாக்டவுன் நமது நாட்டில் தம்பதிக்குள் நெருக்கத்தை அதிகரித்து உள்ளதாகவும், அவர்களுக்குள்  செக்ஸ் உறவும் அதிகரித்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
மென்பொருள் நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதியான பெங்களூர், புனே நொய்டா, சென்னை போன்ற இடங்களில்,  கர்ப்ப பரிசோதனை கருவிகள், கருத்தடை மாத்திரைகளின் விற்பனை சாதாரணமாக நடைபெற்று வருவதை விட பல மடங்கு அதிகமாகி உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. ஐதராபாத்தில் கருத்தடை மாத்திரைகள் அதிகமாக விற்கப்பட்டுள்ளன, மும்பையில் வெறும் காண்டம்தான் அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆய்வுகளில் கூறப்பட்டு உள்ளது.
லாக்டவுனால் பெரும்பாலோனோர் வீட்டில் இருந்துதான் தற்போது பணியாற்றி வருகின்றனர். இதனால் இளம்தம்பதிகள் நேரம் காலம் பாராமல் செக்ஸ் உறவில் ஈடுபடுவதாகவும் தெரிவித்து உள்ளது.

நகர்புற வாழ்க்கை, துரித உணவுகள், பணி நெருக்கடி, தொடர்பணி போன்றவற்றால் கடுமையான மன உளைச்சலைத் அனுபவித்து வந்த  இளம் தலைமுறையினர், இந்த லாக்டவுனால் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.
குறிப்பாக மனஉளைச்சல்,  சரியான, நேர்த்தியான உணவு எடுக்காமல், மாதவிடாய் கோளாறால் அவதிப்பட்டு வந்த பெரும்பாலான இளம்பெண்கள் தற்போது, பாரம்பரிய முறைப்படி வீட்டிலேயே சமைத்து உண்பதாலும், சத்து மிகுந்த காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை அதிக அளவில் சேர்த்துக்கொள்வதாலும், மாதவிடாய் பிரச்சினையில் இருந்து விடுபட்டு வருவதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
லாக்டவுனுக்கு முன்பு மாதவிடாய் பிரச்சினை 27.7 சதவீதமாக இருந்தது தற்போது 12.1 சதவீதமாக குறைந்துள்ளது.   இதனால் அவர்கள் கருவுறுவதில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் தீர்ந்து வருவதை இந்த லாக்டவுன் உறுதி செய்துள்ளது.
லாக்டவுன் காலத்தில் தங்களுக்கு, போதுமாள ஓய்வுநேரம் இருப்பதால், விரும்பும்போதெல்லாம் செக்சில் ஈடுபடுகிறோம்,  செக்ஸ் நாட்டம் வழக்கத்தை விட இப்போது அதிக அளவில் இருப்பதால், அதிகமுறை உடலுறவுகள் நடைபெறுகின்றன என இளம்தம்பதியினர் தெரிவித்து உள்ளனர்.
இருப்பினும், ஒரு சிலர், அதிக அளவிலான உடலுறவினால், ஒரு விதமான சலிப்பும் ஏற்பட்டு இருப்பதாகவும் அங்கலாய்கின்றனர்.
இதுதொடர்பாக,  ஆன்லைன் மூலம் பெண்களிடம் ஆய்வு நடத்திய நிறுவனம், ஆய்வில் குறைந்த அளவிலேயே பெண்கள் கலந்து கொண்டதாகவும், பலர், இந்த லாக்டவுனால், வாரத்துக்கு  குறைந்தது 2 முதல் 5 முறை உறவு வைத்துக்கொள்வதாகவும் தெரிவித்து உள்ளனர்.
லாக்டவுன் காலத்திற்கு முன்பு வாரம் ஒருமுறைகூட செக்ஸ் உறவு வைத்துக்கொள்வதே அரிது என்று பல பெண்கள் தங்களது நிலையை வெளிப்படுத்தி உள்ளனர்.
அதுபோல தற்போது பெரும்பாலான இளம்பெண்கள் கர்ப்பத் தடை முறைகளைக் கடைப்பிடிக்கா மலேயே  உடலுறவில் ஈடுபடுகிறோம், இதனால் கர்ப்பம் தரித்துள்ளோம் என்றும் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்.
முன்பை விட, தற்போது அடிக்கடி “பண்றோம்”.. ஆனால்,  சுவாரஸ்யமே இல்லை என்றும் பலர் தெரிவித்துள்ளராம்…
இதுபோன்ற ஆய்வுகள், மக்களின் இயந்திரத்தனமான வாழ்க்கையை அம்பலப்படுத்தி உள்ளது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில், குறிப்பாக மென்பொருள் நிறுவனங்கள் போன்ற தொழிற் நிறுவனங்களில்,  தம்பதிகள் இருவருமே நேரம் காலம் பாராமல்  பணியாற்றி வருவதால், கடுமையான மன உளைச்சலில் சிக்கி, கர்ப்பம், குழந்தைப் பிறப்பு  என்பதே கேள்விக்குறியாகி வந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ், தம்பதிகளிடையே நெருக்கத்தை ஏற்படுத்தியதோடு,  மட்டுமல்லாமல், தாங்கள் இருவருமே குழந்தைகளை உருவாக்க தகுதி பெற்றவர்கள்தான் என்பதை நிரூபிக்க பேருதவி புரிந்து  உள்ளது.
கொரோனாவா… கொக்கா….