சென்னை:  மத்திய மற்றும்  கல்வி நிலையங்களில் முதுநிலை படிப்புகள் சேருவதற்கான டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்க லாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்விலும் (டான்செட்), எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க் ஆகிய முதுநிலை என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் சேர பொது என்ஜினீயரிங் நுழைவுத் தேர்வையும்(சீட்டா)  எழுதி தேர்வு பெறுவதும் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.  இந்த தேர்வை, அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

அதன்படி,  2025-26-ம் கல்வியாண்டுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வு வருகிற மார்ச் மாதம் 22-ந்தேதி நடைபெறுகிறது. அதேபோல், சீட்டா நுழைவுத் தேர்வு மார்ச் மாதம் 23-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, இந்த டான்செட் மற்றும் சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது. இளநிலை பட்டப்படிப்பு முடித்த அல்லது இறுதி செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்கள் டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுக்கு https://tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 21-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு துறை செயலாளர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.