டில்லி

நேற்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய 44 ஆசிரியர்களுக்குக் குடியரசுத் தலைவர் தேசிய விருந்து வழங்கி கவுரவித்தார்.

நேற்று நாடெங்கும் ஆசிரியர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  அதையொட்டி நாட்டில் பல பகுதிகளைச் சேர்ந்த 44 சிறந்த ஆசிரியர்களுக்குத் தேசிய விருது வழங்கும் விழா நடந்தது.  தற்போதுள்ள கொரோனா கட்டுப்பாடு காரணமாகக் காணொலி மூலம் விழா நடந்தது.  இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கினார்.

விழாவில் குடியரசுத்தலைவர் பேசுகையில், “உலகெங்கும் சிறந்த கல்வியாளராகவும் தத்துவவாதியாகவும் அறியப்பட்ட டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம்.அவர் குடியரசுத் தலைவர் பதவியை வகித்தபோதிலும், தான் ஒரு ஆசிரியராக மட்டுமே நினைவுகூரப்பட வேண்டும் என விரும்பினார்.  மேலும் அவர் சிறந்த ஆசிரியராக அழியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளார்.

அவரது பிறந்த நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  அவர்கள் வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் சிறந்த ஆசிரியர்களின் கையில் பாதுகாப்பாக உள்ளது என என்னிடம் உறுதி அளித்துள்ளனர்.” எனத் தெரிவித்தார்.