சென்னை
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2.58 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று 33,764 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,45,260 ஆகி உள்ளது இதில் நேற்று 475 பேர் உயிர் இழந்து மொத்தம் 21,815 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 29,717 பேர் குணமடைந்து மொத்தம் 16,13,221 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,10,224 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரே வழி தடுப்பூசிகள் மட்டுமே என்பதால் தமிழக அரசு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளைத் தீவிரமாக்கி உள்ளது. ஏற்கனவே 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் அரசு பல இடங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம்கள் அமைத்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 2.58 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இவர்களில் 2.17 லட்சம் பேர் 18-44 வயதுடையவர்கள் ஆவார்கள். தவிர 45 – 60 வயதான 28,336 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மேலும் 60 வயதைத் தாண்டிய 10,780 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.