சேலம்:  சேலம் அருகே உள்ள கோடை வாசஸ்தலமான ஏற்காடு மலையில்,  கோடை விழா, மலர் கண்காட்சி  நாளை மறுதினம் (மே 23ந்தேதி) தொடங்கிறது. இதை யொட்டி, அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டுதோறும் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டு, ஏற்காட்டில் 48வது மலர் கண்காட்சி நடைபெறும் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 48- வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி மே 23- ஆம் தேதி தொடங்கி மே 29- ஆம் தேதி வரை தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெற உள்ளது. மே 23-ல் தொடங்கும் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சியில் வேளாண்மைத்துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்கின்றனர். அண்ணா பூங்காவில் 1.5 லட்சம் மலர்களைக் கொண்டு மலர்க்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

கோடை விழாவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக, ஒவ்வொரு துறை சார்பாக பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மகளிர்துறை சார்பில் கோலப்போட்டியும், சுற்றுலாத்துறை சார்பில் படகு போட்டியும், கால்நடைத்துறை சார்பில் செல்லப் பிராணிகள் கண்காட்சியும் நடைபெறவுள்ளது.

சுற்றுலாத்துறை மற்றும் கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கொம்பு இசை, சிலம்பாட்டம், பறை இசை, மாடு ஆட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, பரதநாட்டிய நிகழ்ச்சி, நாட்டுப்புற பாடல்கள், கரகாட்டம், பப்பட் ஷோ, கிராமிய கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

இத்தகவலை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சுற்றுலாப் பயணிகளின் வசதிகளுக்கான சேலத்திலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 12 பேருந்துகளுடன் தற்பொழுது கூடுதலாக 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.