ஐதராபாத்:
பிரபல அப்போலோ மருத்துவமனையின் முன்னாள் நிர்வாக தலைவரும், அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டியின் மகளுமான ஷோபனா காமினேனி, தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை அறிந்து ஆவேசமானார்.
“நான் ஒரு குடிமகனாக ஏமாற்றப்படுகிறேன்’ எனது வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது என்று வாக்குச்சாவடியில் கொந்தளித்தார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. அத்துடன் ஆந்திரா ஒடிசா, அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டபேரவைகளுக்கும் சேர்த்து தேர்தல் நடைபெறுகிறது.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 25 மக்களவை தொகுதிகளுக்கும், தெலங்கானா மாநிலத்தில் 17 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.
இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டியின் மகள் ஷோபனா காமினேனி, வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு, தனது ஜனநாயக உரிமையை செயல்படுத்தும் நோக்கில், ஓட்டுப்போட இந்தியா வந்துள்ளார்.
இன்று வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில், வாக்குச்சாவடிக்கு ஷோபனா காமினேனியும் தனது வாக்கை செலுத்தலாம் என்று ஆவலோடு சென்றார். அங்கு வாக்களிக்க சென்றபோது, அவரது பெயர் வாக்காளர் பட்டியிலில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு, அவர் வாக்கை செலுத்த மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஆவேசமடைந்த ஷோபனா காமினேனி, எனது வாழ்நாளிலேயே இன்றைய நாள் மோசமான நாள் என்றும், இந்திய குடிமகளாக நான் ஏமாற்றப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
மேலும், நான் ஒட்டு போடுவதற்காக வெளி நாட்டிலிருந்து வந்திருக்கிறேன். எனது வாக்கு நீக்கப்பட்டுள்ளது. எனது வாக்கு முக்கியமில்லையா? இந்திய குடிமகளாக எனக்கு எதிராக் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய குற்றம் இது. என்னால் இதனை பொறுத்துக் கொள்ள முடியாது என ஆவேசமாக கூறினார்.
கடந்த ஆண்டு கடந்த டிசம்பர் மாதம் தெலுங்கானா நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது, இதே வாக்குச்சாவடியில் தாம் வாக்களித்ததாகவும், ஆனால், தற்போது தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று கூறுவதாகவும் குற்றம் சாட்டினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.