டில்லி

ந்தியாவில் அடுத்த அலை கொரோனா பரவல் ஆரம்பித்துள்ளதாக டில்லி அமைச்சர் அறிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் பரவல் உலகெங்கும் அதிகரித்து வருகிறது.  இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 58000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தற்போது 2.14 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் அடுத்த 2 வாரங்களில் இந்தியாவில் மிகவும் வேகமாக அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார்.  இதனால் இந்தியாவில் பரிசோதனை மற்றும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் டில்லியும் ஒன்றாக உள்ளது.  இங்கு சுமார் 10000 பேர் தினசரி பாதிக்கப்படுகின்றனர்.  பரிசோதனை செய்யப்படுவோரில் 10% பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.

இதையொட்டி டில்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின், “உலக அளவில் கொரோனாவின் ஐந்தாம் அலை பரவல் இந்தியாவில் தொடங்கி உள்ளது.  இந்தியாவில் இந்த பரவல் கொரோனாவின் மூன்றாம் அலை பரவலாகும்.  எனவே மக்கள் எச்சரிக்கையுடன் கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.