டெல்லி: மதுரையைச் சேர்ந்த பிரபல  போட்டோகிராபர் செந்தில்குமரனுக்கு ‘வேர்ல்டு பிரஸ் போட்டோ’ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டதைச் சேர்ந்தவர் செந்தில்குமரன். போட்டோகிராபி துறையில் ஏற்பட்ட ஆர்வம் மிகுதி காரணமாக, அதுதொடர்பான ஆவணப் படங்களையும் எடுத்து வருகிறார். குறிப்பாக வனவிலங்குகள் குறித்து அவர் எடுத்துள்ள பல புகைப்படங்கள் ஏராளமான விருதுகளை தட்டிச்சென்றுள்ளன.  வன விலங்குகளின் வாழ்வாதாரம் தொடர்பாக அவர் எடுத்துள்ள பல புகைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

ஏற்கனவே ஏராளமான விருதுகளை குவித்துள்ள செந்தில்குமரனுக்கு 2007ம் ஆண்டு, லண்டன் ராயல் ஜியாகிரபிகல் சொசைட்டியின் சிறந்த புகைப்படக் கலைஞருக்கான விருது கிடைத்துள்ளது.  கங்கை ஆற்றின் கரையோரம் காயப் போடப்பட்டிருந்த சேலைகளை புகைப்படம் எடுத்திருந்தார். இந்தப் புகைப்படம் வைலான நிலையில், இதை அவர், ராயல் ஜியாகிரபிகல் சொசைட்டியின் சிறந்த புகைப்படத்திற்கான போட்டிக்கு அனுப்பி வைத்தார். இந்த போட்டியில்  உலகெங்குமிருந்து வந்திருந்த 1000 புகைப்படங்களில் செந்தில்குமரனுடைய புகைப்படத்திற்கு விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது, வனவிலங்கு தொடர்பான மற்றொரு புகைப்படத்துக்கு விருது கிடைத்துள்ளது. உலக பிரஸ் போட்டோ (world press photo foundation) அறக்கட்டளை சார்பில், செந்தில்குமரனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவிலான புகைப்படக் கலைஞருக்கான விருதை  பெறும் ஒரே தென்னிந்தியவர் என்ற பெருமைக்கு சொந்தகாரனாக ஆகியுள்ளார் செந்தில்குமரன். அவரை பாராட்டுவதில் பத்திரிகை டாட் காம் இணையதளமும் பெருமைகொள்கிறது.