சென்னை:   2024ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு  தமிழ்நாட்டில் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து  உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”தமிழ்நாட்டில் கடந்த 20 மாத காலத்தில் ஏராளமான புதிய தொழில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுவரை 207 தொழில் நிறுவனங்கள் புதிதாக தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப் பட்டுள்ளன.

இதன்மூலம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 209 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதுடன், 3 லட்சத்து 44 ஆயிரத்து 150 நபர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட 207 தொழில் நிறுவனங்களில், இதுவரை 111 நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, 13 ஆயிரத்து 726 கோடி ரூபாய் முதலீடு வரப்பெற்றுள்ளது. 15 ஆயிரத்து 529 நபர்களுக்கு வேலை கிடைக்கப் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டி பல்வேறு மாநிலத்தில் இருந்தும் வந்து நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள். பல்வேறு நாடுகளில் இருந்தும் தொழில் தொடங்க இங்கே வருகிறார்கள். அந்த வகையில், தொழிலதிபர்களையும் நிறுவனங்களையும் ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் 14 ஆவது இடத்தில் இருந்து 3 ஆவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது நம்முடைய தமிழ்நாடு.

நம் மாநிலத்திற்கு மேலும் முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்காக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 2024 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 10மற்றும் 11ஆகிய தேதிகளில், 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பங்கேற்புடன், பெருமளவில் பிரம்மாண்டமாக சென்னையில் நடத்தப்படும்” .

இவ்வாறு கூறினார்.