மும்பை: தங்கத்தின் தேவை தற்போதைய நிலையில் குறைந்துள்ளதால், தங்கத்திற்கான இறக்குமதி வரியைக் குறைக்காவிட்டால், தங்கக் கடத்தல் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது உலக தங்க கவுன்சில்.

தங்கத்தின் தேவை இன்றைய நிலையில் 35.34% அளவிற்கு சரிவைக் கண்டுள்ளதாக அந்த கவுன்சில் குறிப்பிடுகிறது.

இந்தியாவில், கொரோனா காரணமான ஊரடங்குகள், இதுவரை இல்லாத அளவிலான விலை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் தங்கத்தின் தேவை, கடந்த ஆண்டில் 446.4 டன் ஆக குறைந்து விட்டது. கடந்த 2019ம் ஆண்டில், இது 690.4 டன்னாக இது இருந்தது.

ஊரடங்கின் காரணமாக, ஆபரணங்களின் தேவையும் 42% என்பதாக குறைந்துள்ளது. ஆபரணங்களின் தேவை குறைந்ததன் தொடர்ச்சியாக, நாட்டின் மொத்த தங்க இறக்குமதியும் 47% சரிவைக் கண்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டில், 646.8 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டில் 344.2 டன் மட்டுமே இறக்குமதி ஆகியுள்ளது.

இருப்பினும், தற்போது ஊரடங்கு உத்தரவுகள் தொடர்ந்து தளர்த்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து, இயல்பான நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. கடந்த காலாண்டில் தங்கத்தின் இறக்குமதி, 19% அதிகரித்துள்ளதே இதற்கு சாட்சி.

சந்தைக் குறியீடுகள் மிகவும் அதிகரித்திருப்பது மற்றும் வட்டி விகிதம் குறைந்துள்ளது ஆகிய காரணங்களால், தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கு அதிகரிக்க துவங்கியிருக்கிறது.

அடுத்த சில ஆண்டுகளுக்கு, தங்கத்தின் தேவையில், வலுவான முன்னேற்றத்தை காணமுடியும். இதுபோன்ற சூழலில், தங்கத்தின் இறக்குமதிக்கு அதிக வரி வசூலிப்பதானது, கடத்தலை ஊக்குவிப்பதாகவே அமைந்துள்ளது. எனவே, இறக்குமதி வரியை குறைக்க வேண்டியது அவசியம்.

நடப்பு ஆண்டின் பிற்பாதியில், தேவை அதிகரிப்பு தொடரும்பட்சத்தில், இறக்குமதியும் அதிகரித்து, இயல்புக்கு வரும் என எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.