லண்டன்:

இங்கிலாந்து ராணி எலிசபெத் நாய்கள் மீது அதிக பிரியம் கொண்டவர். 91 வயதாகும் ராணிக்கு அருகில் எப்போதும் பல நாய்கள் சுற்றி இருப்பதை பார்க்க முடியும்.

இந்நிலையில் அவர் வளர்த்து வந்த ‘வில்லோ’ என்ற உலக புகழ் பெற்ற நாய் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 15 வயதான அந்த வில்லோ புற்றுநோய் காரணமாக நீண்ட நாட்களாக அவதியுற்று வந்தது. இதன் காரணமாக அரச குடும்பத்தின் செல்லப் பிராணியாக வலம் வந்து கொண்டிருந்த வில்லோவுக்கு முடிவு ஏற்பட்டுவிட்டது.

இந்த தகவலை அரண்மனை வட்டாரங்கள் உறுதி செய்ய மறுத்துவிட்டன. ஆனால் ஊடகங்களில் இது தொடர்பான செய்திகள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 80 ஆண்டுகளாக கோர்கி இன நாய்களை ராணி வளர்த்து வந்தார். இதில் கடைசியாக இருந்த வில்லோ தற்போது மரணமடைந்துள்ளது. இந்த துயர சம்பவத்தால் அரண்மனையே சோகத்தில் மூழ்கியுள்ளது.

2012ம் ஆண்டு லண்டல் ஒலிம்பிக் போட்டிய தொடங்க விழாவில் ராணி எலிசபெத்துடன் வில்லோ கலந்துகொண்டது. அப்போது முதல் வில்லோ உலக புகழ் பெற்றது. 2016ம் ஆண்டு நடந்த ராணியின் அதிகாரப்பூர்வ 90வது பிறந்தநாள் விழாவில் வில்லோ முக்கிய இடத்தை பிடித்தது.

முதுமை காரணமாக செல்லப் பிராணிகளை பரிய மனம் இல்லாத ராணி 2012ம் ஆண்டு முதல் புதிதாக நாய்களை வளர்க்கவில்லை. ஏற்கனவே இருந்த நாய்களை தான் தொடர்ந்து வளர்த்து வருகிறார் என்று அரச குடும்பத்தின் ஆலோசகர் மாண்டி ராபர்ட் தெரிவித்துள்ளார்.