கத்தார்:
லகக்கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதி சுற்றுக்கு குரோஷியா, பிரேசில் அணிகள் முன்னேறியுள்ளன.

உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு நடைபெற்ற முதல் நாக்அவுட் சுற்று ஆட்டத்தில், ஜப்பான்-குரோஷியா அணிகள் மோதின. முதல் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜப்பான், ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் குரேஷியா தன் பங்கிற்கு ஒரு கோலை அடித்து, ஆட்டத்தை சமன் செய்தது.

இதனையடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்ட போதும், இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. எனவே, பெனால்டி ஷூட்அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில், சிறப்பாக விளையாடிய குரேஷியா 3க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.

அதேபோல், மற்றொரு போட்டியில் பிரேசில், தென் கொரியா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் பிரேசில் வீரர்கள் அடுத்தடுத்து 4 கோல்கள் அடித்து அசத்தினர். இரண்டாம் பாதியில் தென் கொரியா ஒரே ஒரு கோல் மட்டுமே அடித்தது. இதன் மூலம் பிரேசில் அணி 4க்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றிப் பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.